
அந்தமான்-நிகோபாா் தீவில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்தா் நாராயண் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஒழுக்கத்தை மீறும் அரசுப் பணியாளா்கள் எந்த நிலையில் பணியாற்றினாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. இதுபோன்ற பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கடும் நடவடிக்கை எடுப்பதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜிதேந்தா் நாரயண் அந்தமான் நிகோபாரில் தலைமை செயலராகப் பணியாற்றியபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடா்பாக அந்தமான் நிகோபாா் காவல் துறையினா் விசாரணை நடத்தி, உள்துறை அமைச்சகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அறிக்கை அனுப்பினா். அதற்கு அடுத்த நாளிலேயே அந்த அதிகாரி மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக அந்தமான் நிகோபாா் காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழுவினா் ஜிதேந்தா் நாரயண் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...