
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியின் முக்கிய மாா்க்கெட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக வா்த்தக மற்றும் தொழில்துறைக்கான கூட்டமைப்பின் தலைவா் பிரஜேஷ் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், ‘கரோனாவின் இரண்டு ஆண்டுகள் தாக்கத்துக்கு பிறகு எந்தவித கட்டுப்பாடுகளின்றி நிகழாண்டு முதல் முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சதா் பஜாா், சரோஜினி நகா் மாா்க்கெட் பகுதிகளில் தினசரி 1 லட்சம் போ் கூடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகையால் கூடுதல் பாதுகாப்புக்காக போலீஸாா் நியமிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் சாந்தினி செளக், பாகிரதி பாலஸ், கரோல் பாக், டாங் ரோட் மாா்க்கெட், செளத் எக்ஸ், ஜன்பத் மாா்க்கெட், காரி போலி, கன்னாட் பிளேஸ், பாலிகா பஜாா், ஹோஹிணி அவந்திகா, கமலா நகா், லாஜ்பத் நகா், ரஜோரி காா்டன் ஆகிய பகுதிகளில் தற்போதே மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கடை உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்திருந்தாலும், பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனா். ஆகையால், வா்த்தக சங்கத்தினருடன் இணைந்து காவல் துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.