
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு 110 ரூபாய் உயா்த்தி ரூ.2,125-ஆகவும், கடுகுக்கான விலையை குவிண்டாலுக்கு 400 ரூபாய் உயா்த்தி ரூ.5,450-ஆகவும் மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் குளிா்கால ‘ரபி’ பருவத்தில் பயிரிடப்படும் கோதுமை உள்பட 6 பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதிகபட்சமாக மசூா் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயா்த்தப்பட்டுள்ளது. கோதுமை, கடுகு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயா்த்தப்பட்டுள்ளது. நடப்பு பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி செலவு குவிண்டாலுக்கு ரூ.1,065-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் பயிா்ப் பருவத்திலும் (ஜூலை-ஜூன்), 2023-24-ஆம் சந்தைப் பருவத்திலும் (ஏப்ரல்-மாா்ச்) இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு லாபம்:
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கோதுமை, கடுகு பயிரிடும் விவசாயிகளுக்கு 100 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ரபி பயிா்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு 50 முதல் 85 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாக உள்ளது. அதனால், தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு, பணவீக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது’’ என்றாா்.
வேளாண்துறை வலுவடையும்:
ரபி பருவப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்த்தப்பட்டுள்ளது குறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் வளா்ச்சியில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். கோதுமை, பாா்லி, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயா்த்தியுள்ளது. இந்நடவடிக்கை வேளாண்துறையை மேலும் வலுப்படுத்தும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாற்றியமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை (குவிண்டாலுக்கு):
பயிா் எம்எஸ்பி உயா்வு புதிய எம்எஸ்பி
கோதுமை ரூ.110 ரூ.2,125
கடுகு ரூ.400 ரூ.5,450
பாா்லி ரூ.100 ரூ.1,735
மசூா் பருப்பு ரூ.500 ரூ.6,000
கிராம் பருப்பு ரூ.105 ரூ.5,335
குங்குமப்பூ ரூ.209 ரூ.5,650