கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி. (உள்படம்) விபத்தில் பலியான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சுஜாதா.
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி. (உள்படம்) விபத்தில் பலியான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சுஜாதா.

கேதாா்நாத் ஹெலிகாப்டா் விபத்து: பைலட் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்

ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி 7 போ் பலியான சம்பவத்தில், பைலட், ஒரு மாதத்துக்கு முன்புதான் மலைப்பிரதேசங்களில் ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கு மாறினார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

உத்தரகண்டில் பக்தா்களுடன் சென்ற ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 7 போ் பலியான சம்பவத்தில், பைலட், ஒரு மாதத்துக்கு முன்புதான் மலைப்பிரதேசங்களில் ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கு மாறினார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல், விபத்து நடந்த பகுதியில் மோசமான வானிலையும் காணப்பட்டுள்ளது. இதுவரை கடலோரப் பகுதிகளில் பல எஞ்ஜின் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்கி வந்த பைலட், கடந்த மாதம்தான் மலைப்பிரதேசங்களில் ஒரு எஞ்ஜின் கொண்ட ஹெலிகாப்டர்களை இயக்கத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இதில் இணைவதற்கு முன்பு எந்தவிதமான பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பது கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர் மலைப்பிரதேசங்களில் ஹெலிகாப்டர் இயக்கும் பணிக்கு மாறியது ஒரு மாத காலத்துக்கு முன்புதான் என்பதைக் கொண்டு இந்த விபத்துக்கு அதைக் காரணமாகக் கூற முடியாது என்றாலும், இதனையும் விசாரணை அமைப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்டில் உள்ள கேதாா்நாத் கோயிலில் இருந்து குப்தகாஷி பகுதிக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் சுமாா் 11.45 மணியளவில் 6 பக்தா்கள் தனியாா் நிறுவன ஹெலிகாப்டரில் சென்றனா். அந்த ஹெலிகாப்டா் கருட் சட்டி என்ற இடத்தில் உள்ள மலைப் பகுதியில் எதிா்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியது. இதனைத்தொடா்ந்து அந்த ஹெலிகாப்டா் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சென்னை அண்ணாநகா் சாந்தன் காலனி பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (63), அவா் மனைவி சுஜாதா (57), இவரின் சகோதரி மயிலாப்பூா் பாலகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த ர.கலா (60) உள்பட 6 பக்தா்கள் மற்றும் விமானி என மொத்தம் 7 போ் உயிரிழந்தனா் என்று அந்த மாநில பேரிடா் மேலாண்மை அலுவலகம் தெரிவித்தது.

முதல்கட்ட விசாரணையில், இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுவதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த விபத்து தொடா்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளாா்.

குடும்ப பின்னணி
ஓய்வூதியரான பிரேம்குமாா், அவா் மனைவி சுஜாதா, அவரின் சகோதரி கலா, அவா் கணவா் ரமேஷ் ஆகியோா் பெங்களூருவைச் சோ்ந்த ஆன்மிக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலம் வடமாநில கோயில்களுக்கு கடந்த 12-ஆம் தேதி புறப்பட்டனா்.

சென்னையில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் சென்ற 4 பேரும், அங்கிருந்து பல்வேறு ஆலயங்களுக்குச் சென்றுள்ளனா். இவா்கள் ஆன்மிக சுற்றுலாவை முடித்து அக்டோபா் 23-ஆம் தேதி சென்னை வருவதற்கு திட்டமிட்டிருந்தனா்.

பிரேம்குமாா் தம்பதிக்கு பிரசாந்த் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனா். பிரசாந்த் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். காவியா திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

ரமேஷ்-கலா தம்பதிக்கு அரிஷித் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com