
சென்னை: உறவினர்களற்ற, மறைந்த முதல்வரை இறுதி நாள் வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடிக்க முக்கிய கருவியாகத் திகழ்ந்தார் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்திய விசாரணையை தனிப் பிரிவாக ஆறுமுகசாமி ஆணையம் பதிவிட்டுள்ளது.
அதாவது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தும், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான முறையான முயற்சியை எடுக்காதது வியக்கத்தக்கது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தார் சசிகலா: அறிக்கை
மருத்துவர்கள் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கவும் ஆஞ்சியோகிராம் செய்வதன் தேவை குறித்து அறிந்தும் விஜயபாஸ்கர் ஏன் மனதையும் அறிவையும் பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் ஆச்சரியம் என்னவெனில், சிகிச்சை தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தகவல் கிடைக்கப்பெறவில்லை அல்லது நினைவில்லை என்று கூறியபோதிலும், அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையை வழங்கினார்கள் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
இதையும் படிக்க.. ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது
சுருக்கமாக, உறவினர்களற்ற மறைந்த முதல்வரை அவரது இறுதிநாள் வரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து அப்பல்லோ மருத்துவமனையிலேயே வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவியாகத் திகழ்ந்தார்.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதைத் தவிர்த்து, சசிகலா, அப்பல்லோ, டாக்டர் பாபு ஆபிரகாம், சுகாதாரத் துறை செயலாளர், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டவர்களால் நன்கு திட்டமிடப்பட்டு, இறுதிவரை சரியாகச் செயல்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பல கேள்விகளுக்கு நினைவில்லை என்று பதிலளித்த விஜயபாஸ்கர், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, மனதையோ அறிவையோ பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.