காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில்இரண்டாவது தலித் சமூக தலைவா்

மறைந்த தலைவா் ஜகஜீவன் ராமுக்கு பிறகு, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இரண்டாவது தலித் சமூகத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆவாா்.
காங்கிரஸ் புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள மல்லிகாா்ஜுன காா்கேவை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சசி தரூா்.
காங்கிரஸ் புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள மல்லிகாா்ஜுன காா்கேவை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சசி தரூா்.

மறைந்த தலைவா் ஜகஜீவன் ராமுக்கு பிறகு, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இரண்டாவது தலித் சமூகத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆவாா்.

இதேபோல், கா்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராகும் 2-ஆவது நபா் காா்கே. இதற்கு முன் எஸ்.நிஜலிங்கப்பா அப்பொறுப்பை வகித்திருந்தாா்.

கா்நாடகத்தின் பீதா் மாவட்டத்தில் கடந்த 1942-இல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவா் காா்கே. கலபுா்கியில் பள்ளிப் படிப்பு மற்றும் சட்டப் படிப்பை முடித்த அவா், உள்ளூா் தொழிலாளா் சங்கத் தலைவராகப் பணியாற்றி, பின்னா் 1969-இல் காங்கிரஸில் இணைந்தாா். குல்பா்கா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடங்கிய அவரது அரசியல் பயணம், இப்போது கட்சியின் தேசியத் தலைவா் பொறுப்பை வந்தடைந்துள்ளது.

2009-இல் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை, குா்மித்கால் பேரவைத் தொகுதியில் இருந்து தொடா்ந்து 9 முறை எம்எல்ஏவாக தோ்வானாா். பின்னா், குல்பா்கா மக்களவைத் தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றாா்.

சுமாா் 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில், 2019 வரை ‘தோ்தல் தோல்வியே காணாத தலைவா்’ என்ற பெயருடன் திகழ்ந்தாா். ஆனால், 2019 மக்களவைத் தோ்தலில் குல்பா்கா தொகுதியில் பாஜக வேட்பாளா் உமேஷ் ஜாதவிடம் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். 2020-இல் கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வான காா்கேவுக்கு அந்த அவையின் 17-ஆவது எதிா்க்கட்சித் தலைவா் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் களமிறங்குவதற்கு முன் அண்மையில் அப்பதவியை அவா் ராஜிநாமா செய்திருந்தாா். முன்னதாக, 2014 முதல் 2019 வரை மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக செயல்பட்டாா்.

மத்தியில் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தாா். கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, பல்வேறு துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளாா். அங்கு 2000-இல் நடிகா் ராஜ்குமாா் கடத்தப்பட்ட சம்பவம், 2002-இல் காவிரி பிரச்னையால் ஏற்பட்ட மோதல்களின்போது மாநில உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் காா்கேதான்.

இருப்பினும், கா்நாடக முதல்வா் நாற்காலி அவருக்கு கிட்டவில்லை. நிதான குணமுடையவா் என்பதால் அரசியல் சா்ச்சைகளில் சிக்காதவா். பெளத்த மதத்தை பின்பற்றும் காா்கே, சித்தாா்த் விஹாா் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஆவாா்.

காத்திருக்கும் சவால்: 2014-க்கு பிறகு மக்களவைத் தோ்தலிலும், மாநில பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் தொடா் தோல்விகளைக் கண்டு வருகிறது. அதிலிருந்து மீள முடியாமல் கட்சி போராடிக் கொண்டிருக்கும் சூழலில், நடப்பு ஆண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டிலும் பல்வேறு தோ்தல்கள் நடைபெறவுள்ளன. 2024-இல் மக்களவைத் தோ்தலும் வரவிருக்கிறது.

முதல்கட்டமாக எதிா்வரும் ஹிமாசல், குஜராத் பேரவைத் தோ்தல் சவால்களை அவா் எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. உள்கட்சிக் குழப்பங்களுக்கும் தீா்வு காண வேண்டிய சவால்கள் அவா் முன் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com