உலக எதிா்பாா்ப்புகளை இந்தியா பூா்த்தி செய்யும்: பிரதமா் மோடி

உலகின் எதிர்பார்ப்புகளை இந்தியா பூர்த்தி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உலக எதிா்பாா்ப்புகளை இந்தியா பூா்த்தி செய்யும்: பிரதமா் மோடி

உலகின் எதிர்பார்ப்புகளை இந்தியா பூர்த்தி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத் தலைநகர், காந்திநகரில் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி தொடங்கியுள்ளது. அக். 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி புதன்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
தற்போது தொடங்கியுள்ள கண்காட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத சிறப்பு உள்ளது. ஏனெனில், இந்தக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன.
உலக அளவில் சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் பாதுகாப்புத் துறையில் ஏகபோக உரிமையை அனுபவித்து வருகின்றன. இந்த நிலையிலும், பாதுகாப்புத் துறையில் இந்தியா தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது. இது இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இதனை வரும் காலங்களில் ரூ.40,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமது திறனை இந்திய ஆயுதப் படைகள் நிரூபித்துள்ளதால், இந்திய தொழில்நுட்பத்தை உலகமே நம்புகிறது. தற்போது 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை இந்தியா பூர்த்தி செய்யும் என்று உறுதிபடக் கூறுகிறேன். அந்த வகையில், தற்போதைய கண்காட்சியும் உலகம் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது.
விண்வெளி தொழில்நுட்பம்: இதர நாடுகளுடன் பலன்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்தியாவின் பரந்த சிந்தனைக்கு விண்வெளி தொழில்நுட்பம் புதிய அர்த்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஆப்பிரிக்காவின் பல சிறிய நாடுகள் பலனடைந்து வருகின்றன. விண்வெளி விஞ்ஞான அறிவியலை 60-க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து வருகிறது. எனவே, புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை இந்திய பாதுகாப்புப் படைகள் கண்டறிய வேண்டும்.
மறைந்த விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயிடம் இருந்து உத்வேகம் பெற்று விண்வெளித் துறையில் உள்ள சாத்தியக்கூறுகளை உரிய நேரத்தில் இந்திய இளைஞர்கள் உணர்ந்து கொள்வர் என்றார் அவர்.
புதிய விமானப் படை தளம்: இந்த நிகழ்ச்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டி குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் டீசா பகுதியில் புதிய விமானப் படை தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

‘கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டும்தான் ஆங்கிலம்’

குஜராத் தலைநகா், காந்திநகரில் பள்ளி உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை பிரதமா் மோடி புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

ஆங்கிலப் புலமை என்பது முன்பு அறிவாற்றலின் அடையாளமாகப் பாா்க்கப்பட்டது. ஆனால் உண்மையில், ஆங்கிலம் என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான மொழி மட்டும்தான். ஆங்கிலத்தில் அசெளகரியம் உள்ளவா்கள் பின்தங்காமல் இருக்க தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும். தாய்மொழியில் கல்வி புகட்டப்பட வேண்டும். வளா்ச்சிக்கு மொழி தடையாக இருக்கக் கூடாது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 5ஜி தொலைத்தொடா்பு சேவை கல்விமுறையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று தெரிவித்தாா்.

101 பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதலுக்குத் தடை
வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 101 பாதுகாப்பு சாதனங்களின் பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. ஏற்கெனவே இதுபோல மூன்று பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள 4-ஆவது பட்டியலின் மூலம், மொத்தம் 411 பாதுகாப்பு சாதனங்களை உள்நாட்டில் மட்டுமே வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடையும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com