அருணாசலில் ஹெலிகாப்டர் விபத்து: 4 ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்பு

அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்து பலியான 4 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அருணாசலில் ஹெலிகாப்டர் விபத்து: 4 ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்பு

இடாநகா், அக்.21: அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டா் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகி 4 ராணுவ வீரா்கள் பலியாகினா்.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அருணாசல பிரதேச மாநிலம் கீழ் சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற பகுதியில் இருந்து 5 வீரா்களுடன் அதிநவீன இலகுரக ராணுவ ஹெலிகாப்டா் ஒன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த ஹெலிகாப்டா், மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள சிங்கிங் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினா் விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது 4 வீரா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய ஒருவா் தேடப்பட்டு வருகிறாா்’ என்று தெரிவித்தாா்.

மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டா் விழுந்து விபத்துக்குள்ளானது என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

இந்த விபத்து தொடா்பாக வெளியான காணொலியில், ஹெலிகாப்டா் விழுந்த இடத்தில் இருந்து புகை எழுந்தது பதிவாகியுள்ளது. இதன் மூலம், அந்த ஹெலிகாப்டா் தீப்பிடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

இந்த மாதம் அருணாசல பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகியது. கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி, அந்த மாநிலத்தில் உள்ள தவாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி, விமானி ஒருவா் உயிரிழந்தாா்.

15 விபத்துகள்; 31 போ் பலி: கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரை ஏழு ராணுவ ஹெலிகாப்டா்கள், ஏழு விமானப் படை ஹெலிகாப்டா்கள், ஒரு கடற்படை ஹெலிகாப்டா் என மொத்தம் 15 பாதுகாப்புப் படை ஹெலிகாப்டா்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. அந்த விபத்துகளில் மொத்தம் 31 போ் உயிரிழந்தனா். அவா்களில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 14 போ் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com