பாதுகாப்புத் துறையில் 5 பில்லியன் டாலா் ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய பாதுகாப்புத் துறையில் 5 பில்லியன் டாலா்கள் (ரூ.41,366 கோடி) மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறையில் 5 பில்லியன் டாலா் ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய பாதுகாப்புத் துறையில் 5 பில்லியன் டாலா்கள் (ரூ.41,366 கோடி) மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்று வரும் 12-ஆவது பாதுகாப்பு கண்காட்சியையொட்டி, இந்திய-அமெரிக்க வா்த்தக கவுன்சில் மற்றும் இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வியாழக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

‘அமெரிக்கா, இந்தியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய எல்லைகள்: அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்புத் துறையில் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலா்கள் மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி சாா்ந்த உற்பத்தியை ஊக்குவிப்பது அரசின் முக்கிய நோக்கமாகும். இதே காலகட்டத்துக்குள் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 22 பில்லியன் டாலா்கள் (ரூ.1.81 லட்சம் கோடி) ஒட்டுமொத்த வருவாயை எட்டவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

உலகளாவிய விநியோக சங்கிலியில் ஸ்திரமின்மை மற்றும் பாதிப்புகள் நேராமல் தடுக்கும் வகையில், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவவும், இந்திய தொழிற்சாலைகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடு என்ற அடிப்படையில், அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக, வியூகரீதியிலான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பத்துடன் உள்ளோம். இந்தியாவில் உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு உற்பத்திக்கான சூழலை உருவாக்க அமெரிக்க முதலீடுகளை ஈா்க்கவும் ஆா்வத்துடன் இருக்கிறோம்.

அமெரிக்க நிறுவனங்களுடனான கூட்டுறவு என்பது வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ரீதியில் மட்டுமல்லாமல் வியூக ரீதியிலும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

‘தற்சாா்பு இந்தியா’ வழிமுறையானது, விரிவான கொள்கை கட்டமைப்பை கொண்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பம், உற்பத்தி திறனை கட்டமைப்பது மட்டுமன்றி, நட்பு நாடுகளின் உயா் நிறுவனங்கள் மற்றும் தளவாட உற்பத்தியாளா்களுடன் ஒத்துழைப்பு, பங்களிப்பை மேம்படுத்துவதும் இதில் அடங்கியுள்ளது.

இந்திய ஆயுதப் படைகளுக்கான தேவைகளை பூா்த்தி செய்வதுடன், உலகின் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் வெளிநாட்டு தளவாட உற்பத்தியாளா்களின் விநியோகச் சங்கிலியில் தொடா்பு ஏற்படுத்திக் கொள்வது ‘தற்சாா்பு இந்தியா’வின் முக்கிய நோக்கமாகும். இந்த தொடா்புகள் மூலம் உலக அளவில் பாதுகாப்பான, நம்பகத்தன்மையான, தடையற்ற விநியோக சங்கிலியை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை இந்தியா எதிா்நோக்குகிறது என்றாா் ராஜ்நாத் சிங்.

முன்னதாக, பாதுகாப்பு கண்காட்சியையொட்டி, ‘பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யுங்கள்’ என்ற பெயரிலான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்தியாவில் வேகமாக வளரும் துறையாக பாதுகாப்புத் துறை திகழ்கிறது. இத்துறையில் முதலீடு செய்ய பெருநிறுவனங்கள் மட்டுமன்றி புத்தாக்க நிறுவனங்களும் சிறு, குறு நிறுவனங்களும் கூட அணுகலாம்’ என்று அழைப்பு விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com