தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் 50 கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டதாகத் தமிழகத்தின் முன்னாள் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார். 
பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் 50 கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டதாக தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார். 

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.  

மேலும் பேசிய அவர், 'பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் ஆளுநராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழக ஆளுநராக, அதாவது 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன். எனது பதவிக் காலத்தில் சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன். 

தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித் துறையை ஒழுங்குபடுத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டினார். அவரிடம் கேளுங்கள். அவரிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார். 

மேலும், 'அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் என் கடமையைச் செய்யவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன். ஒரு ஆளுநரின் பொறுப்பு, அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களைக் கவனிப்பதுமே. என்ன நடந்தாலும் என் கடமையைச் செய்வேன்' என்று கூறியுள்ளார் பன்வாரிலால் புரோஹித். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com