புது தில்லி: சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்தாண்டு அக்டோபர் 31, 2022 வரை சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும், அதற்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை இயக்குநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு அடுத்த ஆண்டு அக்டோபர் 31, 2023 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
மற்ற நிபந்தனைகள் மாறாமல் இருக்கும் என்று அக்டோபர் 28 தேதியில் வெளியிட்ட அறிவிப்பில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) தெரிவித்துள்ளது.
இருப்பினும், சிஎஸ்எல் மற்றும் டிஆர்க்யூ வரிச்சலுகை ஒதுக்கீட்டின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.
சிஎஸ்எல் மற்றும் டிஆர்க்யூ (கட்டண விகித ஒதுக்கீடு) ஆகியவற்றின் கீழ் குறிப்பிட்ட அளவு சர்க்கரை இந்தப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நடப்பு ஆண்டில் உலகிலேயே அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் நிலையான விலையை நிலைநிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கடந்த 16 மாதங்களில் சர்க்கரையின் விலைகள் கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது .