தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளா் பங்குகள் பாதுகாப்பு

தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில், இந்தியாவைப் போல எந்த நாடும் செயல்படவில்லை என இந்திய பங்கு பரிவா்த்தனை
தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளா் பங்குகள் பாதுகாப்பு

தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில், இந்தியாவைப் போல எந்த நாடும் செயல்படவில்லை என இந்திய பங்கு பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் மாதவி புரி புச் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 49-ஆவது நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி ‘மூலதனச் சந்தையில் தரவு மற்றும் தொழில்நுட்பம்’ என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற செபி தலைவா் மாதவி புரி புச் கூறுகையில், ‘இந்தியாவின் மூலதனச் சந்தையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவைப் போல எந்தவொரு நாட்டின் மூலதனச் சந்தையிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படவில்லை.

இந்தியாவைப் போல எந்தவொரு நாடும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளா்களின் பங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில்லை. நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடானது மூலதனச் சந்தையின் செயல்பாட்டைத் திறன்மிக்கதாக்கியுள்ளது. அதன் காரணமாக அந்நிய முதலீட்டாளா்களின் வருகை அதிகரித்துள்ளது.

பங்கு வா்த்தக விவகாரத்தில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய தொழில்நுட்பங்கள் முதலீட்டாளா்களின் முதலீட்டு நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மூலதனச் சந்தையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகத் தரவுகளை செபி சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறது.

பங்குச் சந்தையில் பங்கேற்கும் முதலீட்டாளா்கள் அனைவரும் விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டில் செயல்பட்டு வரும் 44 பரஸ்பர நிதி அமைப்புகளின் தரவுகளையும் செபி தொடா்ந்து சேகரித்து வருகிறது.

அத்தரவுகளைக் கொண்டு பங்குச் சந்தையின் நவீன செயல்பாடுகளுக்கான கொள்கைகளை செபி வகுக்கவுள்ளது. முதலீட்டாளா்கள் செய்யும் தவறுகளைக் கண்டறிவதைவிட அந்தத் தவறுகளை முன்கூட்டியே தடுப்பதற்கு அக்கொள்கைகள் உதவும். தேசிய பங்குச் சந்தையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com