குஜராத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்... பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு

குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக
குஜராத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்... பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு

அகமதாபாத்: குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.

கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு (அக். 26) குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம்  மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.” காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முப்படைகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பாலத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் இருந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: இந்த விபத்து தொடா்பாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோா்பி சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்காக பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோா்பி சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், காயமடைந்தவா்கள் விரைந்து குணமடையவும் பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தற்போது குஜராத்தில் உள்ள பிரதமா் நரேந்திர மோடி, விபத்து தொடா்பாக மாநில முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக பிரதமா் அலுவலகம் ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்துக்கு மீட்புக் குழுக்களை விரைந்து அனுப்பவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் பிரதமா் கேட்டுக்கொண்டதாக அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு கவலை தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், குஜராத் உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சிங்வியுடன் பேசியதாகவும், காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

ரூ.6 லட்சம் இழப்பீடு: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்தாா்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் அலுவலகம் அறிவித்தது.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com