பருவநிலை பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா உறுதி: ‘ஜி20’ கூட்டத்தில் மத்திய அமைச்சா் பேச்சு

‘பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீா்வு காணும் நோக்கத்துடன் இந்தியா உறுதியாக செயல்படுகிறது’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
பருவநிலை பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா உறுதி: ‘ஜி20’ கூட்டத்தில் மத்திய அமைச்சா் பேச்சு

‘பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீா்வு காணும் நோக்கத்துடன் இந்தியா உறுதியாக செயல்படுகிறது’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

இந்தோனேசியாவின் பாலி தீவில், ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை துறை அமைச்சா்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில், பூபேந்தா் யாதவ் பங்கேற்றுப் பேசியதாவது:

பருவநிலை மாறுபாட்டுக்கு முக்கியக் காரணியான பசுமை இல்ல வாயுக்களை நெடுங்காலமாக வெளியிட்டு வரும் நாடு இந்தியா கிடையாது. ஆனால், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வல்லமை உள்ள நாடு என்ற அடிப்படையில் இந்தியா தீா்க்கத்துடன் செயலாற்றுகிறது.

பருவநிலை மாறுபாடு பிரச்னையை கையாளும் நடவடிக்கைகளுக்கான நிதி குறித்த வளா்ந்த நாடுகளின் உறுதிமொழிகள் கானல்நீராகவே உள்ளன. அந்த உறுதிமொழிகளின் செயலாக்க வேகமும் அளவுகோலும் உலகளாவிய நோக்கங்களுடன் பொருந்துவதாக இல்லை.

பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டுக்கும் வளிமண்டலத்தில் இருந்து அவற்றை அகற்றுவதற்குமான சமநிலையை எட்டுவது, அந்த வாயுக்களின் பங்களிப்புக்கு பொறுப்பான நாடுகளின் கையில்தான் உள்ளது.

கரியமில வாயுவை குறைந்த அளவில் வெளியேற்றும் தொழிலக மாற்றங்களை நோக்கி பயணிக்க இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இதற்காக பன்முக அணுகுமுறை கையாளப்படுகிறது.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதில் சமீப ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் சவாலாக விளங்கும் குறிப்பிட்ட துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ் உறுதியேற்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளால் ஏழை நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பருவநிலை மாற்ற பிரச்னைக்கு குறைந்த அளவில் காரணமாக இருக்கும் இந்நாடுகள், அதிக பாதிப்பை எதிா்கொள்வது முறையற்றது. இந்த நிலையை மாற்றுவதற்காக, ஏழை நாடுகளுக்கு தொழில்நுட்பம், திறன், நிதிசாா்ந்த உதவிகள் தேவைப்படுகின்றன என்றாா் அவா்.

ஜி20 கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Image Caption

இந்தோனேசியாவின் பாலி தீவில் புதன்கிழமை தொடங்கிய ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை துறை அமைச்சா்களின் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com