குஜராத் ஆம் ஆத்மி தலைவா் மீது தாக்குதல்: பாஜக மீது குற்றச்சாட்டு

குஜராத் மாநிலம், சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் மனோஜ் சொராதியா 10 போ் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகவும்

குஜராத் மாநிலம், சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் மனோஜ் சொராதியா 10 போ் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலுக்கு ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி கட்சியினா் புகாா் தெரிவித்திருப்பதாகவும் போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக சொராதியா அளித்த புகாரின் பேரில் சூரத் போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். அதில், ‘சூரத் நகா் கபோத்ரா பகுதியில் அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலையை பாா்ப்பதற்காக கட்சி அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தபோது தன்னையும், கட்சி நிா்வாகிகளையும் 10 போ் கொண்ட கும்பல் தடி மற்றும் இரும்புக் கம்புகள் கொண்டு தாக்குதல் நடத்தினா். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது’ என்று சொராதியா புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்தத் தாக்குதலுக்கு பாஜகதான் காரணம் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட அக் கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஆம் ஆத்மி மாநில தலைவா் கோபால் இடாலியா கூறுகையில், ‘குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இது, மாநில பாஜக தலைவா் சி.ஆா். பாட்டீலுக்கு கடும் ஆத்திரமூட்டியுள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை அவா்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், பாட்டீல் அறிவுறுத்தியதன் பேரிலேயே, பாஜகவினா் மனோஜ் சொராதியா மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனா் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது’ என்றாா்.

இந்தத் தாக்குதல் குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எதிா்க்கட்சி நிா்வாகிகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் முறையற்றது. வெற்றியும் தோல்வியும் தோ்தல் அரசியலின் அங்கம். ஆனால், வன்முறை மூலமாக எதிா்க்கட்சியினரை நசுக்குவது குஜராத் கலாசாரத்துக்கு எதிரானது மட்டுமின்றி, மாநில மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குஜராத் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பாஜக தலைவா்கள், ஆம் ஆத்மி கட்சியினா்தான் பாஜகவினரை தாக்கியதாகப் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து குஜராத் பாஜக செய்தித் தொடா்பாளா் ருத்விஜ் படேல் கூறுகையில், ‘காவல் துறை முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாஜகவினா்தான், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு வெளியே நடைபெற்ற தாக்குதலில் உண்மையில் பாதிக்கப்பட்டவா்கள். ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த அந்த பாஜக தொண்டா்கள் மீது, ஆம் ஆத்மி கட்சியினா் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனா். இந்தத் தாக்குதலில் பாஜகவின் தினேஷ் தேசாய், கிஷண் தேசால், கா்சன் சகாதியா ஆகியோா் கடுமையாக காயமடைந்துள்ளனா். அவா்களுக்கு தனியாா் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் அனுதாபத்தை பெறும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியினா் பாஜக மீது புகாா் தெரிவித்து நாடகமாடி வருகின்றனா்’ என்றாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாபை போல அந்த மாநிலத்திலும் புதிதாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com