ஜிகாதி நடவடிக்கைகள்: அஸ்ஸாமில் மதரஸா பள்ளி இடித்து அகற்றம்

அஸ்ஸாம் மாநிலம், பங்கைகெளன் மாவட்டத்தில் இயங்கிவந்த மதரஸா பள்ளியில் ஜிகாதி நடவடிக்கைகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்தப் பள்ளியை அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினர். 
ஜிகாதி நடவடிக்கைகள்: அஸ்ஸாமில் மதரஸா பள்ளி இடித்து அகற்றம்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் மாநிலம், பங்கைகெளன் மாவட்டத்தில் இயங்கிவந்த மதரஸா பள்ளியில் ஜிகாதி நடவடிக்கைகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்தப் பள்ளியை அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினர்.
இதுதொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது: பங்கைகெளன் மாவட்டம், ஜோகிகோபா என்ற இடத்தில் இயங்கிவந்த கபைதாரி மா அரிஃப் எனும் மதரஸா பள்ளியில் "ஜிகாதி' நடவடிக்கைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அல்-காய்தா அமைப்புடனும், வங்கதேசத்தின் பயங்கரவாத அமைப்பான அன்சருல் பங்க்ளா அமைப்புடனும் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த ஆசிரியர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதரஸா பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது. பள்ளியின் உணவகத்தில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியபோது "ஜிகாதி' நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, மதரஸா பள்ளிக் கட்டடம், அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மூலம் பள்ளி நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரண்டு தளங்களைக் கொண்ட அந்தப் பள்ளிக் கட்டடம் 12 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.
முன்னதாக, மதரஸாவில் தங்கி கல்விப் பயின்றுவந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை இரவே அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகமும் மாணவர்களுக்கு உதவிகளைச் செய்தது. மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பாதுகாவலர்கள், பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இடிக்கப்பட்ட மதரஸா பள்ளிகளில் இது இரண்டாவது பள்ளியாகும். கடந்த வாரம் பர்பெட்டா மாவட்டத்தில் இயங்கிவந்த மதரஸா பள்ளி ஒன்று இடித்து அகற்றப்பட்டது. அந்தப் பள்ளியில் 4 ஆண்டுகளாக வங்கதேச பயங்கரவாத அமைப்பான அன்சருல் பங்க்ளா குழுவைச் சேர்ந்த இருவர் தங்கியிருந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் அங்கு சென்று பயங்கரவாதிகளில் ஒரு நபரையும், பள்ளி முதல்வர், ஆசிரியர், மற்றொரு பணியாளரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
அண்மையில் இதுதொடர்பாக மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா அளித்த பேட்டியில், "ஜிகாதி' செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகிறது. கடந்த சில மாதங்களில் அல்-காய்தா அமைப்புடனும் அன்சருல் பங்க்ளா குழுவுடனும் தொடர்பில் இருந்த 5 குழுக்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றார்.
அஸ்ஸாமில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதுவரை ஜிகாதி நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com