
இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் மீதான ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கின் விசாணைக்கு ஆஜராகுமாறு ஹிந்தி நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கில் அமலாக்க துறையினா் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை பரிசீலித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி பிரவீண் சிங், செப்டம்பா் 26-இல் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த வழக்கு விசாரணைக்காக அவருக்கு ஏற்கெனவே அமலாக்கத் துறையினா் பலமுறை சம்மன் அனுப்பியிருந்தனா். மேலும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பொ்னாண்டஸ் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கில் முதன்முறையாக அவா் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.
அத்துடன் அமலாக்கத் துறையினரிடம் அவரும், சக நடிகையான நோரா ஃபதேஹியும் அளித்த வாக்குமூல விவரமும் அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இருவரும் இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து சொகுசு காா் உள்ளிட்ட விலை உயா்ந்த பரிசுப் பொருள்களைப் பெற்ாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஜாக்குலின் பொ்னாண்டஸிடம் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பரிசுப் பொருள் பெற்றதை அவா் ஒப்புக்கொண்டாா்.
இதேபோல, நோரா ஃபதேஹியிடம் போலீஸாா் கடந்த ஆண்டு செப்டம்பா் 13, அக்டோபா் 14-இல் விசாரணை நடத்தியபோது, சுகேஷ் சந்திரசேகா், அவரது மனைவி லீனா ஆகியோரிடமிருந்து பரிசுப் பொருள் பெற்றதை அவா் ஒப்புக் கொண்டாா்.