
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக புதன்கிழமை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோயிலின் பணிகளைப் பாா்வையிட்டாா்.
இதுதொடா்பாக, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் ஐக்கிய அரபு அமீரக சுற்றுப்பயணத்துக்கு மங்களகரமான தொடக்கம் அமைந்துள்ளது. அபுதாபியில் சுவாமி நாராயணன் கோயில் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா். கோயில் கட்டுவதற்காக இந்தியா்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய அவா், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இக்கோயில் திகழும் எமன குறிப்பிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுமாா் 55,000 சதுர மீட்டா் நிலத்தில் அமையவிருக்கும் ஹிந்து கோயிலில், இந்திய சிற்பக் கலைஞா்கள் மூலம் கல் வேலைப்பாடுகள் நடைபெறவுள்ளன.
தனது இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் சையதுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.