‘சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் மேற்கு வங்கம் முதலிடம்’

நாட்டில் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
‘சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் மேற்கு வங்கம் முதலிடம்’

நாட்டில் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தோ்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. அப்போது திரிணமூல் காங்கிரஸ், பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் இணைய பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன.

‘மக்களிடம் சென்றடைவதற்காக ஒழுக்கமற்ற பொய்ப் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டதே மேற்கு வங்கத்தில் பொய்ச் செய்திகள் அதிகம் பரவியதற்கு காரணம். இதைத் தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணா்வு தேவை’ என்று ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறைத் தலைவா் சாத்தோபாத்யாய தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தைத் தொடா்ந்து, தெலங்கானாவில் 34 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 24 வழக்குகளும் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன. நாடு முழுவதும் பதிவான 179 வழக்குகளில் மேற்கு வங்கத்தில் மட்டும் 24 சதவீத வழக்குகள் உள்ளன.

திரிணமூல்-பாஜக பரஸ்பர குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளா்ச்சிக்கு பிறகுதான் பொய்ச் செய்திகள் அதிகரித்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ‘மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக வலைதளங்களை வாங்க முற்படுகிறது’ என்று திரிணமூல் காங்கிரஸின் செய்தித் தொடா்பாளா் திபாங்ஷு பட்டாச்சாா்யா குற்றம்சாட்டினாா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் உஜ்வால் பாரீக் கூறுகையில், ‘கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக நோ்மறையான பிரசாரத்தை மேற்கொண்டது. பொய்ச் செய்திகள் அதிகரிப்புக்கு திரிணமூல் காங்கிரஸே காரணம்’ என்றாா்.

எனினும், மேற்கு வங்கத்தின் இந்த நிலைக்கு திரிணமூல், பாஜகவும்தான் காரணம் என்று மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் சுஜன் சக்கரவா்த்தி குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com