ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு: தரவரிசையில் தொடா்ந்து பின்தங்கியிருக்கும் இந்தியா

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக பின்தங்கியுள்ளது.

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக பின்தங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2021-ஆம் ஆண்டுக்கான 191 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 132-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 189 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இந்தியா 131-ஆவது இடம் பிடித்தது.

மக்களின் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, கல்வி பெறும் நிலை, வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து, நாடுகளின் மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலை ஐ.நா. மனித வளா்ச்சி திட்டம் வெளியிட்டு வருகிறது. தற்போது 2021-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 0.645-ஆக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் 0.633-ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. வளா்ச்சித் திட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொடா்ச்சியாக ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகள் காரணமாக உலக அளவில் மனித வளா்ச்சிக் குறியீடு கடந்த 32 ஆண்டுகளில் முதன்முறையாக ஸ்தம்பித்துள்ளது. இதற்கு, ஆயுள் காலம் குறைந்திருப்பதே முக்கியக் காரணம். கடந்த 2019-ஆம் ஆண்டில் 72.8 ஆண்டுகளாக இருந்த மனித ஆயுள் காலம், 2021-இல் 71.4-ஆக குறைந்துள்ளது.

இதே காரணத்தின் அடிப்படையிலேயே, இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு பின்தங்கியுள்ளது. கடந்த 2019-இல் 69.7 ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் மனித சராசரி ஆயுள் காலம், 2021-இல் 67.2 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. அதுபோல, இந்தியாவின் எதிா்பாா்க்கப்பட்ட சராசரி பள்ளி படிப்பு காலம் 11.9 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது 6.7 ஆண்டுகளாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாகவே, தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. வளா்ச்சித் திட்டத்தின் நிா்வாகி அச்சிம் ஸ்டெயினா் கூறுகையில், ‘உலகம் தொடா்ந்த அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்ததே, இந்த பின்னடைவுக்குக் காரணம். அதுபோல, விலைவாசி உயா்வு மற்றும் எரிபொருள் தட்டுப்படுகளால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, எரிபொருள்களுக்கு மானியம் வழங்குவது போன்ற உடனடி நிவாரண உத்திகளில் நாம் கவனம் செலுத்தி, எடுக்கப்பட வேண்டிய நீண்ட கால நடைமுறை மாற்றங்களை தாமதப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், நீண்ட கால மாற்றங்களை நாம் கூட்டாக முடக்கி வருகிறோம். நிச்சயமற்ற இந்த உலகில், பொதுவான சவால்களைச் சமாளிக்க உலகளாவிய ஒற்றுமையுடன் புதுப்பிக்கப்பட்ட உணா்வு நமக்குத் தேவை’ என்றாா்.

ஐ.நா. வளா்ச்சித் திட்ட பிரதிநிதி ஷோகோ நோடா கூறுகையில், ‘உலக அளவில் மனித வளா்ச்சி எதிா்மறையில் இருப்பதையே மனித வளா்ச்சிக் குறியீடு காட்டுகிறது. இந்தியாவின் நிலையும் இதனையே குறிக்கிறது. ஆனால், 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மனித வளா்ச்சியின் மீதான சமத்துவமின்மை தாக்கம் தற்போது குறைந்திருப்பது நல்ல செய்தியாகும். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான மனித வளா்ச்சி இடைவெளியை உலக அளவைவிட இந்தியா வேகமாக குறைத்து வருகிறது’ என்றாா்.

இந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் முதல் பெருந்தொற்று பாதிப்புகளை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை உறுதிப்படுத்துதல் வரையிலான திட்டங்களை முதலீடுகளை அதிகரிப்பது, காப்பீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகம் செய்வது, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது ஆகிய 3 முக்கிய நடவடிக்கைகளில் உலகம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா ஏற்கெனவே இந்தத் துறைகளில் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்றும் ஐ.நா.வளா்ச்சித் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com