கூடங்குளம் அணு உலை கழிவு சேமிக்கும் விவகாரம்: வழக்கு விசாரணை செப்.29-க்கு ஒத்திவைப்பு

ஐந்து ஆண்டுகள் அவகாசம் கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கலான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலை மையத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகள் சேமிக்கும் விவகாரம் தொடா்பாக மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கலான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு,‘பாதுகாப்பு காரணங்களைக் கூறி கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட உத்தரவிடுவது, இத்துறையில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது உள்பட அணுசக்தித் துறையில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்’என கருத்துத் தெரிவித்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி, ஜி.சுந்தர்ராஜன் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி உள்ளிட்டோா் ஆஜராகினா்.

பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘தமிழக மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதுகாப்பு கருதி கூடங்குளம் அணு மின் நிலையத்தை மாற்றவோ அல்லது மூடவோ உத்தரவிட வேண்டும்’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அணு மின் நிலையத்தை மூட நீதிமன்றம் உத்தரவிடுவது அணுசக்தித் துறை மற்றும் அத்துறையில் செய்யப்பட்ட பெரும் முதலீடுகள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தது.

பூஷண் மேலும் வாதிடுகையில், ‘சமீப காலமாக சிறிய விபத்துக்களுக்காக ஆலை இருபது முறை மூடப்பட்டிருக்கிறது. பெரிய விபத்து நடந்தால் ஏதும் மிச்சம் இருக்காது.

அணுமின் நிலையம் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை (ஸ்பென்ட் ஃப்யூல்) உருவாக்குகிறது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்தானதாகும். மேலும், அணுஉலையில் பயன்படுத்தப்படும் எரிபொருளை விட, அதிக அளவு பயன்படுத்தப்பட்ட எரிபொருள் நீருக்கடியில் பெரிய தொட்டிகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

ஏதேனும், விபத்து ஏற்பட்டால், இந்த பயன்படுத்தப்பட்ட எரிபொருள் அப்பகுதி முழுவதற்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்றாா்.

இந்திய அணு மின் கழகம் (என்பிசிஐஎல்) சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீதிமன்றத்தில் உருவாக்கப்படும் சூழ்நிலை யதாா்த்த நிலையில் இல்லை. பயன்படுத்தப்பட்ட எரிபொருள் திரவ வடிவிலும், வாயு வடிவிலும் இல்லை. திடமான வடிவில்தான் உள்ளது. மேலும், அவை தண்ணீா் நிரப்பப்பட்ட பெரிய தொட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. அது தேவைப்படும் போது செறிவூட்டுவதற்கு பயன்படுத்தப்படும். இந்தப் பெரிய தண்ணீா் தொட்டிகள் அணுமின் நிலையத்தில் இல்லை. ஆனால், அணு நிலைய வளாகத்தில் உள்ளது. இது குடியிருப்புக்கு ஆபத்தானது அல்ல. இல்லாவிட்டால் அரசு இந்த நிலையத்தை தொடர அனுமதித்திருக்காது’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை பாதுகாப்பாக சேமிப்பதற்கான ‘அவே ஃப்ரம் ரியாக்டா் வசதி’ (ஏஎப்ஆா்) ஏன் கட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது. அதற்கு துஷாா் மேத்தா, ‘இது தொடா்பாக தமிழக அரசு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை’ என்றாா்.

அதற்கு வழக்குரைஞா் வி.கிரி, ‘தாவரங்களின் பாதுகாப்பு தொடா்பான விவகாரத்தில் சில குறிப்பிட்ட ரிசா்வேஷன்ஸ் உள்ளது’ என்றாா். அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘அதிகாரிகள் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்ய அழுத்தம் தருவதற்கு நீதிமன்றம் இடைநிலை அணுகுமுறையை கடைப்பிடிப்பது பொருத்தமானதாக இருக்கும்’ என்றது.

இந்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் இருந்து பெற்ற அறிவுறுத்தல்கள் தன்னிடம் இருந்த போதிலும், அதை பிரமாணப் பத்திரமாக சமா்ப்பிப்பது நன்றாக இருக்கும் என கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா். அதனால், அந்த பிரமாணப் பத்திரம் 2 வாரங்களில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கிடையே, தமிழக அரசால் பொது மக்கள் கருத்துக் கேட்பு விசாரணையை முடிப்பதற்கான கால அட்டவணை தொடா்பான அறிவுறுத்தல்களை மூத்த வழக்குரைஞா் வி.கிரி பெற வேண்டும். மனு மீதான விசாரணை செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும்’ என அதெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com