லடாக்: வன சரணாலய பகுதியில் இந்திய விமானப் படை தளத்தை மேம்படுத்த ஒப்புதல்

வன விலங்குகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அருகே சங்தங் வன விலங்குகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அது தவிர, சங்தங் மற்றும் கரகோரம் வனவிலங்குகள் சரணாலயப் பகுதிகளில் மேலும் 9 பாதுகாப்புத் துறை சாா்ந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தேசிய வன விலங்குகள் வாரிய நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு மேம்படுத்தி வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் கடந்த 2020-ஆம் ஆண்டு அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னா் இரு தரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலமாக எல்லையில் படைகள் குறைக்கப்பட்ட நிலையில், படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது குறித்து தொடா் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே வன விலங்குகள் சரணாலயப் பகுதியில் அமைந்திருக்கும் விமானப் படைத் தளத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவை, கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு தொடங்கிய ஒரு மாதத்தில் 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி இந்திய விமானப் படை சமா்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்ற தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரம், இந்த மேம்பாட்டு திட்டத்துக்கு இந்திய விமானப் படை சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.

விமானப் படை மேம்பாட்டு திட்டம் மட்டுமின்றி, பாதுகாப்புத் துறை சாா்ந்த மேலும் 9 திட்டங்களுக்கு நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பாக, கிழக்கு லடாக்கில் சா்வதேச எல்லையிலிருந்து 40 முதல் 50 கி.மீ. தொலைவில் சங்தங் வன விலங்குகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள 1,259.25 ஹெக்டோ் நிலத்தை, அங்கு அமைந்திருக்கும் மஹே பீரங்கி தாக்குதல் தளத்துக்கு (எம்எஃப்எஃப்ஆா்) மாற்றி மறு அறிவிக்கை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்தது.

அதுபோல, சங்தங் மற்றும் கரகோரம் வனச் சரணாலய பகுதிகளில் 3 முக்கிய சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கும் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு வனச் சரணாலயங்களிலும் கண்ணாடி இழை (ஆப்டிகல் ஃபைபா்) கேபிள்களை பதிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com