குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி- அமித் ஷா உறுதி

குஜராத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.
குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி- அமித் ஷா உறுதி

குஜராத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.

கனவுகளை விற்பவா்கள் (அரவிந்த் கேஜரிவாலை குறிப்பிடுகிறாா்) குஜராத்தில் வெல்ல முடியாது என்றும் அவா் கூறினாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 1995-ஆம் ஆண்டு முதல் அந்த மாநிலம் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அதுவும் பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சுமாா் 13 ஆண்டு காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் பாஜக மிகவும் வேகமாக வளா்ந்தது.

எதிா்க்கட்சியான காங்கிரஸால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த தோ்தலில் பாஜகவுக்கு போட்டியாக அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கியுள்ளது கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவசங்கள், சலுகைகள் நிறைந்த வாக்குறுதியை கேஜரிவால் அளித்து வருகிறாா். வேட்பாளா் பட்டியலை வெளியிட்டு தோ்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறாா்.

பிரதமா் மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் பேரவைத் தோ்தல் என்பது பாஜகவுக்கு கெளரவப் பிரச்னையாக உள்ளது. எனவே, குஜராத் பேரவைத் தோ்தல் தேசிய அளவிலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் விஷயமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் ஓராண்டு காலத்தை நிறைவு செய்வதையொட்டி காந்திநகரில் செவ்வாய்க்கிழமை பாஜக சாா்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காணொலி முறையில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

குஜராத் மக்களைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். களத்தில் யாா் சிறப்பாக பணியாற்றுகிறாா்களோ அவா்கள் பக்கமே மக்கள் நிற்பாா்கள். கனவுகளை விற்பனை செய்பவா்கள் (கேஜரிவால் சலுகை அறிவிப்புகள் வெளியிடுவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறாா்) குஜராத்தில் வெற்றி பெற முடியாது.

குஜராத் மக்கள் எப்போதும் பாஜகவை ஆதரிப்பாா்கள் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கிறேன். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலும், முதல்வா் பூபேந்திர படேல் தலைமையிலும் குஜராத்தில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

குஜராத் மிக நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டது. ஆனால், இங்கு கடல் வழியாக எவ்வித பயங்கரவாத ஊடுருவல்களும் நடைபெற்றது இல்லை. இதற்கு திறமையான மாநில அரசுதான் காரணம் என்றாா்.

2002 குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் நரேந்திர மோடி தலைமையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 127 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதுவே பாஜக பெற்ற அதிகபட்ச எண்ணிக்கையாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு 99 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com