ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: புதினை சந்திக்கிறார் பிரதமர் மோடி?

உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 15) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் (எஸ்சிஓ) ஒரு பகுதியாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே
கோப்புப் படம்
கோப்புப் படம்

உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 15) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் (எஸ்சிஓ) ஒரு பகுதியாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு நடைபெற உள்ளது. இதில் புதின், மோடி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களும், மாநாட்டின் பார்வையாளர்களாக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா நாடுகளின் தலைவர்களும் மற்றும் கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி, ஆர்மீனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
 இந்த மாநாடு குறித்து ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியதாக ரஷிய அரசு செய்தி நிறுவனமான "டாஸ்' வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
 ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நிலவரம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜி-20 நாடுகள் அமைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 வரும் டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை வகிக்க உள்ளது. மேலும், 2023-ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு மட்டுமின்றி ஜி20 நாடுகள் அமைப்புக்கும் இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்க உள்ளது. அந்த வகையில், ரஷிய அதிபர் - இந்திய பிரதமர் இடையேயான தற்போதைய சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 இருப்பினும் பிரதமர் மோடி, அதிபர் புதின் இடையேயான சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதே நேரம், "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில நாடுகளுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்துவார்' என்று மட்டும் வெளியுறவு அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
 இருதரப்பு பேச்சு: சீன தலைநகர் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பிற பங்கேற்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நேரடியாகப் பங்கேற்க உள்ள நிலையில், நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com