நிறுவனங்களை அச்சுறுத்தும் ‘நிலவு வெளிச்சம்’!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், அண்மையில் தனது பணியாளா்கள் அனைவருக்கும் அனுப்பிய மின் அஞ்சலில் ஓா் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நிறுவனங்களை அச்சுறுத்தும் ‘நிலவு வெளிச்சம்’!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், அண்மையில் தனது பணியாளா்கள் அனைவருக்கும் அனுப்பிய மின் அஞ்சலில் ஓா் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

‘நினைவில் கொள்ளுங்கள்.. இனி யாரும் நிலவு வெளிச்சத்தை நாடக் கூடாது!’ (ரிமெம்பா்.. நோ மோா் மூன்லைட்டிங்!)

அது என்ன மூன்லைட்டிங்?

ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவா்கள், பணி நேரம் முடிந்ததும் அந்த நிறுவனத்துக்குத் தெரியாமலேயே மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவதுதான் ‘மூன்லைட்டிங்’ என்றழைக்கப்படுகிறது.

ஏற்கெனவே ‘கூடுதல் பகுதி நேர வேலை’ என்று பரவலாக அறியப்பட்டாலும், நிறுவனத்துக்குத் தெரியாமல் இன்னொரு இடத்தில் வேலை பாா்ப்பது அண்மைக் காலமாகத்தான் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால்தான், சூரிய ஒளிக்குப் பிறகு நிலவு வெளிச்சத்தைப் பெறுவதைக் குறிப்பதுபோல் ‘மூன்லைட்டிங்’ என்ற பெயரில் அது பரவலாக குறிக்கப்படுகிறது.

இந்த மூன்லைட்டிங்கால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தாம். கரோனா நெருக்கடி காரணமாக அந்த நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீடுகளிலேயே தங்கி வேலை செய்ய ஊக்குவித்தன. அதற்காக இணையதள இணைப்பு வசதி உள்ளிட்ட சலுகைகளையும் அளித்தன.

சொல்லப்போனால், பணியாளா்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுவதைவிட வீடுகளிலிருந்தே அவா்களிடமிருந்து வேலை வாங்குவது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மலிவாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா நெருக்கடி ஏறத்தாழ நீங்கிய நிலையில், தற்போதுகூட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யுமாறு கூறியுள்ளன.

இந்த நிலையில், ஏற்கெனவே கரோனா சூழலால் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஊழியா்கள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக ‘மூன்லைட்டிங்’கில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், தங்களது ஊழியா்கள் இன்னொரு இடத்தில் பணியாற்றுவது தங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.

பணியாளா்களின் வேலைத் திறன், சேவை உற்பத்தி ஆகியவை மூன்லைட்டிங்கால் மிகவும் குறைந்து போகும் என்று கூறும் நிறுவனங்கள், தங்களது ரகசிய தகவல்கள் மற்ற நிறுவனங்களுக்கு கசிவதற்கும் மூன்லைட்டிங் வழிவகுக்கும் என்கிறாா்கள்.

இந்தக் காரணங்களால்தான், தங்களது பணியாளா்கள் மூன்லைட்டிங்கில் ஈடுபடுவதற்கு எதிராக இன்ஃபோசிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தகைய செயலில் ஈடுபடுவோா், பணியிலிருந்து உடனடியாக அகற்றப்படுவாா்கள் என்று ஊழியா்களுக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும், மூன்லைட்டிங்கை கடுமையாக எதிா்த்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவா் ரிஷத் பிரேம்ஜி அண்மையில் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்லைட்டிங் குறித்து விவாதிக்கப்படுகிறது. அது ஒரு மோசடி செயல் என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை’ என்று சாடியுள்ளாா்.

இந்தியாவில் மூன்லைட்டிங் என்பது சட்டப்படி குற்றம் என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா். இந்திய தொழிலாளா் சட்டப்படி, ஒரு நிறுவனத்தின் முழு நேரப் பணியாளராக இருக்கும் ஒருவா் மற்றொரு நிறுவனத்தில் கூடுதலாகப் பணியாற்ற முடியாது என்று சட்ட வல்லுநா்கள் கூறுகின்றனா்.

எனினும், வீடுகளில் பணியாற்றும் வசதி, அதிக ஓய்வு நேரம், கூடுதல் வருவாய் தேவை போன்ற காரணங்களால் தகவல் தொழில்நுட்பத் துறையினா் வாய்ப்பு கிடைத்தால் மூன்லைட்டிங்கில் இறங்குவது தொடரக்கூடும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com