பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்று விஷ ஊசி போட்டுக் கொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்று போகும் வழியில், அவருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்று விஷ ஊசி போட்டுக் கொலை
பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்று விஷ ஊசி போட்டுக் கொலை


ஹைதராபாத்: இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்று போகும் வழியில், அவருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் விஷ ஊசி போட்டுக் கொலை செய்தவரையும், கொலையான நபரின் மனைவி மற்றும் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கொலைக்குப் பின்னணியில், கொலை செய்தவருக்கும், கொலையானவரின் மனைவிக்கும் இருந்த நெருங்கிய தொடர்புதான் காரணம் என்பதும், கொலையானவரின் மனைவியே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி, மரணம் இயற்கையானது போல இருக்குமாறு செய்ய இந்த விஷ ஊசி சதியை தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 55 வயதாகும் விவசாயியான ஷேக் ஜமால் சாஹேப், செப்டம்பர் 19ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில், முகத்தை மறைத்தபடி ஒரு குல்லா அணிந்து கொண்டிருந்த நபர், இரு சக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டுள்ளார். இவரும் அப்பாவியாக அவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். சிறிது தூரம் சென்றதும், பின்னால் இருந்தவர், ஒரு ஊசியை எடுத்து, ஜமாலின் தொடையில் அழுத்துகிறார்.

அவர் வலியால் கத்தவும், பின்னால் அமர்ந்திருந்த நபர் வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோடுகிறார். அருகிலிருந்த விவசாயிகளிடம் ஜமால் உதவிகோருகிறர். அவர்களிடம் தனக்கு என்ன நேர்ந்தது என்பதயும் விரிவாக சொல்கிறார். அவர்கள் உடனடியாக ஜமாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்கும்போதே அவர் மரணம் அடைந்துவிடுகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் மோகன் ராவ், டிராக்டர் ஓட்டுநர் வெங்கடேஷ், மருத்துவர் வெங்கட் (விஷ ஊசி வாங்கிக் கொடுத்தவர்) ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.

இதில், கொலையான ஜமாலின் மனைவி இமாம் பீ, தான் இந்த கொலைக்கு சதிதிட்டம் தீட்டிக்கொடுத்துள்ளார். அது மட்டுமல்ல, இரண்டு மாதங்களுக்கு முன்பே, விஷ ஊசியை வாங்கி வைத்துக் கொண்டு, அதனை ஜமாலுக்கு செலுத்த சரியான நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதேவேளையில், தான் அந்த விஷ ஊசியை செலுத்தாமல், தனது ஆண் நண்பரிடம் சொல்லி விஷ ஊசியை செலுத்த திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளார். அவர் சொன்னபடியே மோகனும் ஜமாலுக்கு விஷ ஊசி போட்டுள்ளார்.

விசாரணையின் முடிவில் இமாம் பீ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயியை மனைவியே தீர்த்துக் கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com