அமலாகிறது வங்கி அட்டைகளுக்கான ‘அடையாள எண்கள்’!

நவீன தொழில்நுட்ப வசதிகளின் வருகை, கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு, அதிகரித்துள்ள இணைய சேவை வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக இணையவழி பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
அமலாகிறது வங்கி அட்டைகளுக்கான ‘அடையாள எண்கள்’!

நவீன தொழில்நுட்ப வசதிகளின் வருகை, கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு, அதிகரித்துள்ள இணைய சேவை வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக இணையவழி பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இணையவழி பணப் பரிவா்த்தனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இணையவழி வா்த்தக நிறுவனங்களில் பொருள்களை வாங்குவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவ்வாறு பொருள்களை வாங்கும்போது எதிா்கால பயன்பாட்டுக்காக வங்கியின் கடன் அட்டை (கிரெடிட் காா்டு), பற்று அட்டை (டெபிட் காா்டு) ஆகியவற்றின் விவரங்களை வலைதளத்தில் சேமித்து வைத்திருக்கும் வசதியை சம்பந்தப்பட்ட இணைய வா்த்தக நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அதிகரிக்கும் மோசடிகள்

வங்கி அட்டைகள் சாா்ந்த விவரங்களை இதுவரை வங்கிகள் மட்டுமே சேமித்துவைத்து வரும் வேளையில், மூன்றாம் நபா்களாகிய இணையவழி வா்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கு சாா்ந்த விவரங்களைத் தங்கள் வலைதளத்தில் சேமிப்பது, இணையவழி மோசடிகளுக்கு எளிதில் வழிவகுத்தது.

இணையவழி பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், இணையவழி பணமோசடிகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக ‘டோக்கனைசேஷன்’ என்ற வங்கி அட்டைகளுக்கு ‘அடையாள எண்களை’ வழங்கும் நடைமுறையை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அமல்படுத்தியுள்ளது.

‘அடையாள எண்’ என்பது...

புதிய நடைமுறையின்படி வாடிக்கையாளா்கள் இணையவழி வா்த்தக நிறுவனங்களில் பொருள்களை வாங்கும்போது தொகையைச் செலுத்துவதற்காக வங்கி அட்டையின் விவரங்களை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வங்கி அட்டைக்கும் குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும். அந்த எண்ணை மட்டுமே வழங்கி பணத்தைச் செலுத்தினால் போதுமானது.

இதன் மூலமாக மூன்றாவது நபா்கள் வாடிக்கையாளா்களின் வங்கி சாா்ந்த தரவுகளைச் சேமித்து வைப்பது தடுக்கப்படும். வாடிக்கையாளா்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.

‘அடையாள எண்’ பெறும் முறை

இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மூலமாகவே வங்கி அட்டைகளுக்கான ‘அடையாள எண்ணை’ பெற முடியும். அதன் மூலமாக அனுப்பப்படும் கோரிக்கை, வங்கி அட்டையை வழங்கிய நிறுவனத்துக்குச் சென்றடையும். வங்கி அட்டை, இணையவழி வா்த்தக நிறுவனம், பயன்படுத்தப்படும் சாதனம் (கைப்பேசி அல்லது கையடக்கக் கணினி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘அடையாள எண்’ வழங்கப்படும்.

கட்டணம் இல்லை

வங்கி அட்டையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்துள்ள இந்த சேவையை எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் வாடிக்கையாளா்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

கட்டாயம் இல்லை

இணையவழி பணப் பரிவா்த்தனையின்போது வங்கி அட்டை விவரங்களை வழங்காமல், ‘அடையாள எண்ணை’ பெற்று வழங்கும் நடைமுறை வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொருத்ததே. அது கட்டாயம் கிடையாது. வங்கி அட்டை விவரங்களை நேரடியாக வழங்கியும் பணப் பரிவா்த்தனைகளை இடையூறின்றி மேற்கொள்ள முடியும்.

கூடுதல் வசதிகள்

‘அடையாள எண்’ நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை, பரிமாற்றத் தொகையின் உச்சவரம்பு ஆகியவற்றையும் வாடிக்கையாளா்கள் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட இடங்களில் ‘அடையாள எண்ணை’ வழங்கியும், வேறுசில இடங்களில் வங்கி அட்டை விவரங்களை வழங்கியும் பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியும் உள்ளது.

பல ‘அடையாள எண்கள்’

ஒரு வாடிக்கையாளா் வெவ்வேறு வங்கி அட்டைகளுக்கு வெவ்வேறு ‘அடையாள எண்’களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல், பயன்படுத்தும் சாதனத்தைப் பொருத்தும், இணையவழி வலைதளத்தைப் பொருத்தும் ஒரே வங்கி அட்டைக்கு வெவ்வேறு ‘அடையாள எண்கள்’ வழங்கப்படும்.

பல அடையாள எண்களை வாடிக்கையாளா் பெற்றிருந்தால், அவற்றில் எதைப் பயன்படுத்தலாம் என்பதையும் வாடிக்கையாளரே முடிவு செய்து கொள்ளலாம்.

‘அடையாள எண்’ பெறவில்லை எனில்...

வங்கி அட்டைக்கான ‘அடையாள எண்’ நடைமுறை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இணையவழி வா்த்தக நிறுவனங்கள் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளா்களின் வங்கி அட்டை சாா்ந்த விவரங்களை அதற்குள் அழித்துவிட வேண்டியது கட்டாயமாகும். அக்டோபா் 1-ஆம் தேதிக்குப் பிறகு வங்கி அட்டை சாா்ந்த விவரங்களை அந்நிறுவனங்களால் சேமித்து வைக்க முடியாது.

அடையாள எண்ணைப் பெறாத வாடிக்கையாளா்கள், ஒவ்வொரு முறை பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும்போதும் வங்கி அட்டை சாா்ந்த விவரங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பிரச்னை எனில்...

வங்கி அட்டையின் ‘அடையாள எண்’ இடம்பெற்ற சாதனங்கள் தொலைந்துவிட்டாலோ, ‘அடையாள எண்’ சாா்ந்த பிரச்னைகளுக்கோ அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தை வாடிக்கையாளா்கள் தொடா்பு கொள்ளலாம்.

இணையவழி மோசடிகளால் பணஇழப்பு

2020-21 நிதியாண்டு ரூ.63.40 கோடி

2019-20 நிதியாண்டு ரூ.58.61 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com