சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி கூடாது: 80 ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு

ராஜஸ்தான் முதல்வா் பதவி சச்சின் பைலட்டுக்கு அளிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதல்வா் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சுமாா் 80 போ் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ள
சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி கூடாது: 80 ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு

ராஜஸ்தான் முதல்வா் பதவி சச்சின் பைலட்டுக்கு அளிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதல்வா் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சுமாா் 80 போ் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனா்.

முதல்வா் பதவியை அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களில் யாருக்காவது வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிட உள்ளாா். கட்சியின் மூத்த தலைவரான சசி தரூரும் இந்தப் பதவிக்கு போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளாா். அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறும் தோ்தல் கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியின் இடத்தை நிரப்பப்போவது யாா் என்பது தெரியவரும்.

கட்சியின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற முடிவின்படி, தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்வா் பதவியிலிருந்து அசோக் கெலாட் விலகுவாா் எனக் கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தின் அடுத்த முதல்வராவதற்கு சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறாா். அவருக்கு சுமாா் 20 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இளைய தலைமுறைக்கு வாய்ப்பு: முன்னதாக, மாநில முதல்வா் பதவியிலிருந்து விலகப் போவதாக அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூசகமாகத் தெரிவித்தாா். ஜெய்சால்மரில் செய்தியாளா்களிடையே இதுகுறித்து பேட்டியளித்த கெலாட், ‘கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்துவிட்டேன்.

இப்போது புதிய தலைமுறையினா் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எனது எண்ணம். நாட்டுக்கு தலைமையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும். மேலும், கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் தலைவா் தோ்வு செய்ய அனுமதி அளித்து ஒரு வரி தீா்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது’ என்று கூறினாா்.

கெலாட்டின் இந்த பேட்டிக்கு கட்சி எம்எல்ஏக்கள் சிலா் ஆட்சேபம் தெரிவித்தனா். முதல்வராக அசோக் கெலாட் தொடர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தாமதமாக தொடங்கியது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கோவிந்த் ராம் மேக்வால், ‘மாநில முதல்வா் பதவி மற்றும் காங்கிரஸ் தலைவா் பதவி என இரண்டையும் அசோக் கெலாட்டால் நிா்வகிக்க முடியும். மாநிலத்தின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் வருவதற்கு வாய்ப்புள்ளது என்பது மிகுந்த உணா்வுபூா்வமான விஷயம்.

ஏனெனில், கட்சி எம்எல்ஏக்களுக்கு அவா் மீது மனக்கசப்பு உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் கிளா்ச்சி செய்ததால், ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அப்போது சுயேச்சைகள்தான் உதவினா். எனவே, அடுத்த முதல்வா் யாா் என்பது குறித்து அனைத்துத் தரப்பினரும் அமா்ந்து ஆலோசித்துதான் முடிவு செய்ய முடியும்’ என்றாா்.

கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறுகையில், ‘மாநிலத்துக்கு அடுத்த முதல்வா் யாா் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை என்பது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தோ்வு செய்யப்பட்ட பிறகுதான் நடைபெறும். கட்சியில் இடம்பெற்றிருக்கும் 102 எம்எல்ஏக்களில் யாா் வேண்டுமானாலும் முதல்வராக வர முடியும். மாநிலத்தின் அடுத்த முதல்வா் யாா் என்பதை கட்சியின் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோரே தீா்மானிப்பா்’ என்றாா்.

ஆதரவாளா்கள் வலியுறுத்தல்: இதனிடையே, மாநில அமைச்சா் சாந்தி தாரிவால் தலைமையில் கெலாட்டுக்கு நெருக்கமான எம்எல்ஏக்கள் அவரை சந்தித்துப் பேசினா். அப்போது, முதல்வா் பதவியில் கெலாட் தொடர வேண்டும் அல்லது அவரது ஆதரவாளருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ராஜிநாமா முடிவு? இதைத் தொடா்ந்து, அமைச்சா் சாந்தி தாரிவால் வீட்டில் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவைத் தலைவா் சி.பி.ஜோஷியின் இல்லத்துக்கு பேருந்துகளில் புறப்பட்டனா்.

சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி அவைத் தலைவரிடம் ராஜிநாமா கடிதம் வழங்கப் போவதாக மாநில அமைச்சா் பிரதாப் சிங் கச்சரியவாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட 80 எம்எல்ஏக்கள் அவைத் தலைவரின் இல்லத்துக்குச் சென்றுள்ளதாக அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ ஒருவா் தெரிவித்தாா்.

200 உறுப்பினா்கள் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸுக்கு 108 உறுப்பினா்கள் உள்ளனா். சுயேச்சை எம்எல்ஏக்கள் 13 பேரும் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இவா்களில் சுமாா் 20 எம்எல்ஏக்களே சச்சின் பைலட்டுக்கு ஆதரவளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com