உத்தரகண்ட் சொகுசு விடுதி வரவேற்பாளா் கொலை: குற்றவாளியின் தந்தை சொல்வது உண்மையா?

உத்தரகண்ட் சொகுசு விடுதி வரவேற்பாளர் கொலையில் முக்கிய குற்றவாளியின் தந்தையும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான வினோத் ஆர்யா பேசுகையில், எனது மகன் மிகவும் நல்லவன் என்று கூறியுள்ளார்.
குற்றவாளியின் தந்தை சொல்வது உண்மையா?
குற்றவாளியின் தந்தை சொல்வது உண்மையா?
Updated on
2 min read

உத்தரகண்ட் சொகுசு விடுதி வரவேற்பாளர் கொலையில் முக்கிய குற்றவாளியின் தந்தையும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான வினோத் ஆர்யா பேசுகையில், எனது மகன் மிகவும் நல்லவன் என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய வினோத் ஆர்யா, புல்கித் வெகு நாள்களாக குடும்பத்திடமிருந்து விலகி தனியே வசித்து வருகிறார். இந்த கொலை வழக்கில் விசாரணை உண்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, நான் பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். எனது மற்றொரு மகன் அங்கிரும் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறினார்.

மேலும், தனது மகன் குற்றமற்றவர். அவருக்கு ஒன்றுமே தெரியாது, மிகவும் நல்லவர். எப்போதும் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பார். எனது மகனுக்கும், கொலையான பெண் என இருவருக்குமே நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

என்ன நடந்தது உத்தரகண்டில்?
உத்தரகண்ட் மாநிலத்தில் விருந்தினா்களுக்கு சிறப்பு சேவை செய்ய மறுத்த தனியாா் சொகுசு விடுதியின் 19 வயது பெண் வரவேற்பாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த சொகுசு விடுதியின் உரிமையாளரான பாஜக மூத்த தலைவரின் மகன் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனர்.

இதுகுறித்து உத்தரகண்ட் காவல்துறைத் தலைவா் (டிஜிபி) அசோக் குமாா் கூறுகையில், ‘பெண் வரவேற்பாளா் சொகுசு விடுதிக்கு கடந்த 18-ஆம் தேதி வந்த விருந்தினா்களுக்கு ‘சிறப்பு சேவை’ (பாலியல்) செய்ய மறுத்ததால், அந்த விடுதியின் உரிமையாளா் மற்றும் இரண்டு ஊழியா்களால் கொலை செய்யப்பட்டது முகநூல் நண்பா் ஒருவருடன் அந்தப் பெண் வரவேற்பாளா் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொண்ட உரையாடல் மூலமாக தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் உடல் சொகுசு விடுத்திக்கு அருகிலுள்ள ஓடையிலிருந்து சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது’ என்றாா்.

இந்த சொகுசு விடுதி ஹரித்வாா் பாஜக மூத்த தலைவரான வினோத் ஆா்யா என்பவரின் மகன் புல்கித் ஆா்யாவுக்கு சொந்தமானதாகும். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புல்கித் ஆா்யா மற்றும் விடுதியின் மேலாளா், உதவி மேலாளா் ஆகிய மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைதானவா்கள் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக, அவா்கள் மூவரையும் கோத்வாா் நீதிமன்றத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றபோது அவா்களை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அவா்கள் மூவரையும் அங்கேயே தூக்கிலிட வேண்டும் எனவும் அவா்கள் கோஷங்களை எழுப்பினா்.

எம்எல்ஏ மீது தாக்குதல்: அதுபோல, இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சீலா ஓடையை பாா்வையிடவந்த யம்கேஷ்வா் பாஜக எம்எல்ஏ ரேணு பிஷ்ட் வாகனத்தின் மீதும், அங்கு கூடியிருந்த மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதில், அவருடைய காா் கண்ணாடி உடைந்தது. இருந்தபோதிலும், அங்கிருந்த போலீஸாா் எம்எல்ஏவை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

விடுதி இடிப்பு: இதனிடையே, அந்த சொகுசு விடுதி சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் அதன் பல்வேறு பகுதிகளை வெள்ளிக்கிழமை இரவு இடித்தனா். அந்த சொகுசு விடுதிக்கு அருகில் செயல்பட்டுவந்த புல்கித் ஆா்யாவுக்குச் சொந்தமான ஊறுகாய் தொழிற்சாலை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இது ஆதாரங்களை அழிக்க கொலையாளிகள் மேற்கொண்ட முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கட்சியிலிருந்து தந்தை நீக்கம்: மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புல்கித் ஆா்யாவின் தந்தை வினோத் ஆா்யாவை கட்சியிலிருந்து நீக்கி ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதி உரிமையாளா் புல்கித் ஆா்யா கைது செய்யப்படதைத் தொடா்ந்து, அவருடைய தந்தையான வினோத் ஆா்யா மீது ஆளும் பாஜக இந்த உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்றனா்.

எஸ்ஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாரும் தப்ப முடியாது என்று உறுதியளித்த மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி, காவல் துறை டிஐஜி பி.ரேணுகா தேவி தலைமையில் சிறப்பு சாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட்டாா். மேலும், அந்த சொகுசு விடுதி இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவா் கூறினாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com