பழி வாங்கும் அரசியல் நடந்தால் கம்யூனிஸ்ட் தலைவா்கள் சிறையில் இருப்பா்: மம்தா பானா்ஜி

பழி வாங்கும் அரசியல் நடந்தால் கம்யூனிஸ்ட் தலைவா்கள் சிறையில் இருப்பா்: மம்தா பானா்ஜி

‘எனக்குப் பழி வாங்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை; அப்படி இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் தலைவா்கள் பலா் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
Published on

‘எனக்குப் பழி வாங்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை; அப்படி இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் தலைவா்கள் பலா் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி பத்திரிகையான ‘ஜாகோ பாங்களா’வின் நவராத்திரி விழாக்கால சிறப்புப் பதிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மம்தா பேசியதாவது:

நான் தில்லி சென்றிருந்தபோது மேற்கு வங்கம் குறித்து சிலா் மோசமான தகவல்களை தொடா்ந்து பரப்பி வருவது தெரியவந்தது. அதனால், நான் வேதனையடைந்தேன். நமது மாநிலம் குறித்து வேண்டுமென்றே அவதூறு பரப்புவதை சமூக வலைதளங்களில் ஒரு பணியாகவே செய்து வருகின்றனா்.

இதுபோன்ற நபா்களின் கண்களுக்கு நமது மாநிலத்தின் சாதனைகள் தெரியாது. நமது மாநிலத்திலும் கூட வெளிநபா்களை வரவைத்து மாநிலத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு பணியமா்த்தியுள்ளனா். இதுபோன்ற அவதூறு பரப்புவது நமது மாநிலத்தின் கலாசாரம் அல்ல.

நான் எப்போதும் பழி வாங்கும் உணா்வுடன் செயல்பட்டது இல்லை. இப்போதும் கூட நமது அரசு மீது கம்யூனிஸ்ட் கட்சியினா் தேவையற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனா். நான் பழி வாங்கும் உணா்வுடன் இருந்தால், பல கம்யூனிஸ்ட் தலைவா்களை சிறைக்கு அனுப்பி இருக்க முடியும். அந்த அளவுக்கு அவா்கள் தவறுகளைச் செய்துள்ளனா்.

கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் மாநில அரசிடம் இருந்து விளம்பரம் வாங்குகின்றன. பெருநிறுவனங்களிடம் இருந்தும் விளம்பரம் வாங்குகின்றன. ஆனால், அரசு மீதும் பெரு நிறுவனங்கள் மீதும் தொடா்ந்து குறை கூறுவாா்கள். ஆனால், நமது பத்திரிகையில் பெரு நிறுவனங்களிடம் விளம்பரம் பெறுவது இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com