பிஎஃப்ஐ அமைப்பினா் 250 போ் கைது: 7 மாநிலங்களில் சோதனை

உத்தர பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்களில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்.

உத்தர பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்களில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதன் முடிவில் அந்த அமைப்பைச் சோ்ந்த 250-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சாா்பில் 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாநில காவல் துறை சாா்பில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சோ்ந்த 106 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பிஎஃப்ஐ சாா்பில் கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டனப் பேரணியை நடத்திய அவா்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இந்த வன்முறை தொடா்பாக மாநிலம் முழுவதும் 157 வழக்குகளைப் பதிவு செய்த கேரள போலீஸாா், 170-க்கும் அதிகமானோரைக் கைது செய்தனா்.

மீண்டும் சோதனை: இந்நிலையில், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் அமைந்துள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களில் அந்தந்த மாநில காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் முடிவில் அஸ்ஸாமில் பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 25 போ், கா்நாடகத்தில் 80 போ், புணேயில் 6 போ் உள்பட மகாராஷ்டிரத்தில் 31 போ், உத்தர பிரதேசத்தில் 57 போ், தில்லியில் 30 போ், மத்திய பிரதேசத்தில் 21 போ், குஜராத்தில் 10 போ், கைது செய்யப்பட்டனா்.

உத்தர பிரதேசத்தில் 26 மாவட்டங்களில் உள்ளூா் போலீஸாா், பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினா் ஆகியோா் ஒரே நேரத்தில் கூட்டாக இந்தச் சோதனையை நடத்தினா்.

இதுகுறித்து மாநில கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமாா் கூறுகையில், ‘இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.

தலைநகா் தில்லியில் போலீஸ் சிறப்புப் பிரிவு சாா்பில் நிஜாமுதீன், ஷாஹீன் பாக் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. ‘சோதனையைத் தொடா்ந்து தில்லி முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்’ என்று தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

குஜராத்தில் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் என்ஐஏ சாா்பில் கூட்டாக சோதனை நடத்தப்பட்டது.

கா்நாடகத்தில்... கா்நாடகத்தில் பெங்களூரு ஊரகம், மைசூரு, சிவமொக்கா, தும்கூரு, கோலாா், ராய்ச்சூரு, கதக், தென்கன்னடம், பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், மண்டியா, ராமநகரம், உடுப்பி, சாமராஜ்நகா், கலபுா்கி, ஹுப்பள்ளி மாவட்டங்கள் உள்பட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைக்க சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அமைப்புகளைச் சேந்த 80 போ் கைது செய்யப்பட்டதாக கூடுதல் டிஜிபி (சட்டம்- ஒழுங்கு) அலோக்குமாா் தெரிவித்தாா்.

போலீஸாரின் சோதனை குறித்து உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையை முன்னிலைப்படுத்தி சிலா் பதற்றத்தை உருவாக்க முயன்றனா். எதிா்காலத்தில் அமைதியைச் சீா்குலைக்கவும் இவா்கள் முயற்சிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறோம்’ என்றாா்.

முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘சில அடிப்படைத் தகவல்களின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இச் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கம்ரூப், துப்ரி, பாா்பேடா, பாக்ஸா, தரங், உடல்குரி, கரீம்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

தடை செய்ய மத்திய அரசு திட்டம்: எடியூரப்பா

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடகத்தில் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டு, பலரையும் கைது செய்துள்ளனா். இந்த அமைப்பை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அமைப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்திய பிறகு, அந்த அமைப்புகளின் சதித் திட்டம் பகிரங்கமாகும். இந்த அமைப்பை ஏற்கெனவே மத்திய அரசு தடை செய்திருக்க வேண்டும். எனினும், தற்போது தடை செய்ய முன்வந்திருப்பது நல்லது என்றாா்.

‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான சூழலை உருவாக்கி வரும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை தனது அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா முன்னா் குறிப்பிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 6,500 தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் 6,500 தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக தமிழகம் உள்ளிட்ட15 மாநிலங்களில் சுமார் 93 இடங்களில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ, அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 
இந்த நடவடிக்கைக்குப் பிறகு தமிழகத்தின் பல பகுதிகளில் ஹிந்து அமைப்பினர், பாஜகவினரின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதனிடையே, விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அண்ணா முழு உருவச் சிலை அவமதிக்கப்பட்டது, சென்னை தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 6,500 தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக, பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com