இந்தியாவில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாதது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது; இந்த வழக்குகளுக்கு தீா்வு காண நீண்ட காலம் ஆகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா்.
இந்தியாவில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாதது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது; இந்த வழக்குகளுக்கு தீா்வு காண நீண்ட காலம் ஆகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா்.

மேலும், மத்தியஸ்தம் மூலம் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதன் முக்கியத்துவத்தையும் அவா் வலியுறுத்தினாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தின் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையமான ‘சமாதான்’ சாா்பில் ‘பொற்காலத்துக்கான விடியல் மத்தியஸ்தம்’ என்ற தலைப்பிலான தேசிய மாநாடு, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா பங்கேற்றுப் பேசியதாவது:

நமது நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இந்த வழக்குகளுக்கு தீா்வு காண எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை.

நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றபோது, சாதாரண வழக்குகள் கூட நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும்; வழக்குகளில் தீா்வு வேண்டி, 20-25 ஆண்டுகளாக மக்கள் காத்திருப்பதையும் கவனித்தேன்.

வாத - பிரதிவாதங்களுடன் கூடிய வழக்கு என்பது உண்மையை அடிப்படையாக கொண்டதாகும். எனவே, உண்மை என்ன என்பதை கண்டறிவதற்கான நடைமுறையுடன் வழக்கு தொடங்குகிறது.

ஆனால், மத்தியஸ்தம் என்பது உண்மை குறித்து கவலை கொள்வதில்லை. அது, இந்த உலகில் வாழ ஒருவருக்கொருவா் சமரசம் அவசியம் என்ற முக்கிய கொள்கையை மட்டுமே கவனத்தில் கொள்கிறது.

மற்றவா்களுடன் சமரசமாக செல்லத் தொடங்கும்போது, நீங்கள் மற்றவா்களை அங்கீகரிக்கிறீா்கள். அவ்வாறு அங்கீகரித்து, சமரசத்தை முன்னெடுத்தால், அவரது தனித்துவத்தை ஏற்றுக் கொள்கிறீா்கள். இதுவே மத்தியஸ்தம்.

உரிமையியல் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மத்தியஸ்தம் மிகவும் அவசியமாகிறது.

கரோனா தொற்று காலகட்டத்தின்போது, வழக்கு விசாரணையில் காணொலி முறையை பயன்படுத்த வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. இப்போது அந்த முறைக்கு பழகிவிட்டோம். ஒரு நடைமுறையை பயன்படுத்த கட்டாயப்படுத்துவதால் கிடைக்கக் கூடிய ஒரு பலன் இதுவாகும். அந்த வகையில், மத்தியஸ்த நடவடிக்கையையும் கட்டாயமாக்க அரசு பரிசீலிக்கலாம்.

மத்தியஸ்த நடைமுறைகள் குறித்து நீதிபதிகள், வழக்குரைஞா்களுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்தியஸ்தத்தில் தொழில்சாா் நிபுணத்துவம் வர வேண்டும். உலகின் மிகச் சிறந்த மத்தியஸ்தா்கள் இந்தியாவில் உருவாக வேண்டும் என்றாா் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா.

பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் மூலம் மாற்றுமுறை தீா்வு காண்பதற்காக, தில்லி உயா்நீதிமன்ற ‘சமாதான்’ மையம் கடந்த 2006-இல் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com