கர்நாடக தேர்தல்: முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு மறுப்பு

எஞ்சியிருந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா
முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

எஞ்சியிருந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவித்திருந்தது. 224 தொகுதிகளில் இதுவரை 222 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக வெளியிட்டிருந்தது.

வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் நிறைவடையவிருந்த நிலையில், எஞ்சியிருந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. ஆனால், இந்த பட்டியலில் பாஜக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகன் கே.இ.காந்தேஷுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா போட்டியிட்டு வந்த சிவமொக்கா தொகுதியில் பாஜக வேட்பாளராக சென்னபசப்பா நிறுத்தப்பட்டிருக்கிறார். மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை மேலிடத்தலைவர்களின் வாயிலாக தெரிந்து கொண்ட கே.எஸ்.ஈஸ்வரப்பா, தான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அளிக்குமாறு கட்சியின் மேலிடத் தலைவர்களிடம் கே.எஸ்.ஈஸ்வரப்பா வேண்டுகோள் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ள பாஜக மேலிடம், சிவமொக்கா தொகுதிக்கு சென்னபசப்பாவை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த பாஜக எம்.எல்.சி. ஆயனூர் மஞ்சுநாத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்த ஆயனூர் மஞ்சுநாத், மஜதவில் இணைந்தார்.

இதை தொடர்ந்து, சிவமொக்கா தொகுதியின் மஜதவேட்பாளராக ஆயனூர் மஞ்சுநாத் நிறுத்தப்பட்டிருக்கிறார். பழங்குடியினர் போட்டியிடக்கூடிய மான்வி தொகுதிக்கு பி.வி.நாயக்கை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com