நாளை அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல்

ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நாளை சனிக்கிழமை தில்லி அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல் காந்தி. 
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
ராகுல் காந்தி (கோப்புப் படம்)

புதுதில்லி: குற்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நாளை சனிக்கிழமை தில்லி அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல் காந்தி. 

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி, கா்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டவா்களை ராகுல் சா்ச்சைக்குரிய கருத்து மூலம் அவமதித்ததாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்ற அவமதிப்பு வழக்குக்குரிய அதிகபட்ச தண்டனையான இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுலுக்கு விதித்து கடந்த மாதம் 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவா்களின் எம்.பி., எம்எல்ஏ பதவியைப் பறிக்கலாம் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தெரிவிக்கிறது. அதன்படி ராகுலை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்வதாக மக்களவைச் செயலகம் அடுத்த நாளே அறிவித்தது. 

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, மார்ச் 27 இல் அரசு வீட்டை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சூரத் மாவட்ட நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவையும், இரு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரும் மனுவையும், வழக்கில் ஜாமீன் கோரும் மனுவையும் தனித்தனியாக சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்தாா். அன்றைய தினமே வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஆா்.பி.மொகேரா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதே வேளையில், கீழமை நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மே 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

நீதிமன்ற அமா்வின் உத்தரவுக்கு எதிராக குஜராத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி துக்ளக்கில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை அடுத்து ராகுல் காந்தி நாளை சனிக்கிழமை தில்லி அரசு வீட்டை காலி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அரசு வீட்டை காலி செய்யும் ராகுல், தில்லி 10 ஜன்பத்தில் தனது தாய் சோனியா காந்தி தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்கிறார் என்று அவரது அலுவலக தகவல் தெரிவித்துள்ளது. இதற்காக அரசு வீட்டில் இருந்த பொருள்களை மாற்றும் பணி தொடங்கியுள்ளது. 

2005 முதல் தில்லி துக்ளக்கில் உள்ள அரசு வீட்டில் தங்கியிருந்த 52 வயதான ராகுல் காந்திக்கு வீட்டை காலி செய்யுமாறு நாடாளுமன்ற வீட்டு வசதிக் குழு நிர்ணயித்த காலக்கெடு ஞாயிற்றுக்கிழையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com