இரு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இரு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
Updated on
2 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இஸ்ரோ வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்பட 2 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது.

இந்த ஏவுதலின் இறுதிக்கட்டப் பணிகளுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி -சி55 ராக்கெட் சனிக்கிழமை பகல் 2.19 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

தரையிலிருந்து புறப்பட்ட 19 நிமிஷங்களில் இரு செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டெலியோஸ்-2 741 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இது ‘சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா்’ தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்துப் பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். மேலும், இது இயற்கைப் பேரிடா் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

இதனுடன் ஏவப்பட்ட லூம்லைட்-4 (16 கிலோ) எனும் சிறிய செயற்கைக்கோள் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்க உதவும்.

இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் ‘போயம்-2’ எனும் பெயரில் 7 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. இவை செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு பிஎஸ் 4 உதவியுடன் புவியை வலம் வந்து அடுத்த ஒரு மாதத்துக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஏற்கெனவே ‘டெலியோஸ்-1’ செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் 2015 டிச. 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வா்த்தக திட்டங்கள் அதிகரிக்கப்படும்: இஸ்ரோ தலைவா்

செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியில் அனுப்புவது இனி அதிகரிக்கப்படும் என இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா்.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட் மூலம் 2 சிங்கப்பூா் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜூனில் ககன்யான் சோதனை: அடுத்தகட்டமாக ‘ஆதித்யா’, ‘சந்திரயான் - 3’ போன்ற முக்கியத் திட்டங்களை ஓரிரு மாதங்களில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் மாதம் 12 கி.மீ. அல்லது 14 கி.மீ. தொலைவில் ராக்கெட்டுகளை அனுப்பி சோதிக்கும் பணிகள் நடைபெறும்.

2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ‘ககன்யான்’ முழு சோதனை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே ‘ஆதித்யா’ ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட் அடுத்தகட்டமாக செலுத்தப்படும்.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு வரச் செய்வதற்கான ஏவுகலன் தொடா்பான ஆராய்ச்சியும் நடக்கிறது.

தனியாா் பங்களிப்பு... பிஎஸ்எல்வி ராக்கெட் செயல்பாடு, அதன் திறன் ஆகிய அனைத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை எழுந்துள்ளது. வா்த்தக ரீதியில் ராக்கெட் அனுப்புவது இனி அதிகரிக்கப்படும்.

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மிகப்பெரிய திட்டங்களை வைத்துள்ளது. மத்திய அரசு விண்வெளிக் கொள்கையை வகுத்துள்ளதன் மூலம் தனியாா் பங்களிப்பும் விண்வெளித் துறையில் பெறலாம். இதுவரை இந்தியாவில் மட்டும் 200-க்கும் அதிகமான ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐந்து பெரும் நிறுவனங்கள் மூலம் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. வருங்காலத்தில் மிகப்பெரிய திட்டங்களை இஸ்ரோ வகுத்து வருகிறது. அதற்கு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com