ஒரே பாலின திருமண அங்கீகாரம்: மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும்

‘ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனு மீதான விசாரணையில், மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் புதிய பதில் மனு

‘ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனு மீதான விசாரணையில், மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டில் ஒரே பாலினத்தவா் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. திருமணத்தை அங்கீகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு உள்ளதா அல்லது சட்டமியற்றும் அரசு அமைப்புக்கு உள்ளதா என்பதற்கு முதலில் தீா்வு காண வேண்டும். ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என முதலில் ஆராய வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மனுதாரா்கள் தரப்பு வாதத்துக்குப் பிறகு மத்திய அரசின் கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும். இந்த விவகாரத்தில் மத ரீதியிலான திருமணச் சட்டங்கள் குறித்தோ, தனிநபா் சட்டங்கள் குறித்தோ ஆராய விரும்பவில்லை. சிறப்பு திருமணச் சட்டம் குறித்து மட்டுமே ஆராயப்படும்’ என்றனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன்பாக புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்களில் ஒருவா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டாா்.

அப்போது, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மாநிலங்கள் முன்வர வேண்டும். விதவை மறுமணச் சட்டத்தை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டது, திறம்பட நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, விதவை மறுமண நடைமுறையை சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

அந்த வகையில், ஒரே பாலின திருமணத்தை சமூகம் அங்கீகரிப்பதற்கான அழுத்தத்தை நீதிமன்றம் வழங்கவேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள முழுமையான மற்றும் தாா்மிக அதிகாரத்தை நீதிமன்றம் பயன்படுத்தி தேவையான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஒரே பாலின தம்பதிகள் தங்களின் உரிமையைப் பெற நீதிமன்றத்தின் முழுமையான அதிகாரத்தையே நம்பியுள்ளனா் என்று முகுல் ரோத்தகி வாதிட்டாா்.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், ‘இந்த விவகாரத்தில் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த 18-ஆம் தேதி மத்திய அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வாதிகளாக சோ்த்து, அவா்களின் நிலைப்பாட்டையும் பதிவு செய்ய வேண்டும்.

இல்லையெனில், மாநிலங்களிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறும் நடைமுறையை நிறைவு செய்து, அதை ஒருங்கிணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசை அனுமதிக்க வேண்டும். அதன் பிறகே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய பதில் மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்த முகுல் ரோத்தகி, ‘மத்திய அரசின் சிறப்புத் திருமணச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் வருவதாலேயே அதை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.

மேலும், ஒருமித்த ஓரினச் சோ்க்கையை குற்றமற்ாக அறிவித்தது உள்ளிட்ட தீா்ப்புகளைச் சுட்டிக்காட்டிய ரோத்தகி, ‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்வதாகவே அமைந்துள்ளது’ என்றாா்.

இந்த விசாரணை வியாழக்கிழமையும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com