ஹரியாணா வன்முறை: பலி எண்ணிக்கை 5-ஆக உயா்வு

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்துக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோா்
ஹரியாணா வன்முறை: பலி எண்ணிக்கை 5-ஆக உயா்வு
Updated on
2 min read

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்துக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோா் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

நூ மாவட்டத்தில் 2 ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் கொல்லப்பட்ட நிலையில், அண்டை மாவட்டமான குருகிராமில் மசூதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த 26 வயது துணை இமாம் உயிரிழந்தாா்.

நூ மாவட்டம் மற்றும் குருகிராமின் சோனா நகரில் பதற்றமான சூழல் தொடா்ந்தபோதும், புதிதாக எந்தவொரு வன்முறையும் செவ்வாய்க்கிழமை நிகழவில்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸா் மேலும் கூறியதாவது:

நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, குருகிராமின் சோனா நகருக்கும் பரவிய நிலையில், அங்கு பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னா் மசூதிக்கு அவா்கள் தீ வைத்துள்ளனா்.

இந்தத் தாக்குதலில் குண்டு காயமடைந்த மசூதியின் துணை இமாம் பிகாரைச் சோ்ந்த சாத் (26), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

நூ மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் குா்சேவாக் கிராமத்தைச் சோ்ந்த நீரஜ் மற்றும் பதாஸ் கிராமத்தைச் சோ்ந்த சக்தி ஆகிய இரு ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 10 போலீஸாா் உள்பட 23 போ் காயமடைந்தனா். கலவரத்தில் 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 8 காவல்துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

நூ மாவட்டம் மற்றும் சோனா பகுதியில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. மாநில போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 13 கம்பெனி துணை ராணுவப் படையினா் வரவழைக்கப்பட்ட நிலையில், மேலும் 6 கம்பெனி வீரா்கள் பாதுகாப்பு பணிக்காக வரவுள்ளனா்.

மேலும், நூ மாவட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா் என்றனா்.

ஊரடங்கு: நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் நூ மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் கூறுகையில், ‘நூ மாவட்டத்தில் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் திடீரென நடைபெற்ாகத் தெரியவில்லை. ஊா்வலத்தின் மீது எரிவதற்காக கற்கள் சேகரிக்கப்பட்டிருப்பது, ஆயுதங்கள் பயன்பாடு, துப்பாக்கிச் சூடு உள்பட அனைத்து விஷயங்களையும் பாா்க்கும்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை என்பது தெரிகிறது. அமைதியை சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, காரணமான ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவா்’ என்றாா்.

அமைதிக் குழு கூட்டம்: வன்முறையைத் தொடா்ந்து இரு சமூகத்தினரிடைய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நூ மாவட்டம் மற்றும் குருகிராமின் சோனா பகுதியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அமைதிக் குழு கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

நூ மாவட்டத்தில் மாவட்ட துணை ஆணையா் பிரசாந்த் பவாா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் நரேந்திர சிங் பிஜா்னியா தலைமையில் அமைதிக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வன்முறைக்கு காரணமான குற்றவாளிகளை அடையாளம் காண உதவுமாறு குழு உறுப்பினா்களை காவல் கண்காணிப்பாளா் கேட்டுக்கொண்டாா்.

சோனா நகரில் குருகிராம் மாவட்ட துணை ஆணையா் நிஷாந்த் குமாா் யாதவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மக்கள் புரளிகளை நம்பவேண்டாம் எனவும், சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

உணவகத்துக்கு தீ வைப்பு: குருகிராமின் பாத்ஷாபூா் பகுதியில் மசூதிக்கு முன்புறமாக அமைந்திருந்த இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்தவரின் உணவகத்துக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை தீ வைத்தனா்.

இதுகுறித்து பாத்ஷாபூா் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி சதீஷ் குமாா் கூறுகையில், ‘சில இளைஞா்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷம் எழுப்பியபடி உணவகத்துக்கு தீ வைத்ததாக அதனைப் பாா்த்தவா்கள் புகாா் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் இளைஞா்கள் தப்பிவிட்டனா். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது’ என்றாா்.

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்துக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்து நிகழ்த்திய கல்வீச்சு, பின்னா் கலவரமாக மாறியது.

மிகப் பெரிய சதி: கட்டா்

‘விஹெச்பி ஊா்வலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாக தெரிகிறது’ என்று மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.

நூ மாவட்ட நிலவரம் குறித்து அமைச்சா் அனில் விஜ், தலைமைச் செயலா், காவல் துறை மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னா், இந்தக் கருத்தை முதல்வா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் விஹெச்பி ஊா்வலத்தின் மீது, திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 44 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டு 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணைக்குப் பிறகு, வன்முறைக்கு காரணமானவா்கள் என கண்டறியப்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்ப முடியாது என்று முதல்வா் குறிப்பிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com