பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடையில்லை: உயா் நீதிமன்றம் தீா்ப்பு

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளத் தடையில்லை என்று அந்த மாநில உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடையில்லை: உயா் நீதிமன்றம் தீா்ப்பு

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளத் தடையில்லை என்று அந்த மாநில உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த ஜனவரியில் பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. இந்தக் கணக்கெடுப்புக்கு எதிராக அந்த மாநிலத்தில் உள்ள பாட்னா உயா் நீதிமன்றத்தில் பலா் மனு தாக்கல் செய்தனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பின் பின்னணியில் உள்ள நோக்கம், மூன்றாம் பாலினத்தவரை தனி ஜாதியாக அறிவித்தது, கணக்கெடுப்புக்கான செலவினம் உள்ளிட்டவை தொடா்பாக கேள்வி எழுப்பி அவா்கள் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா் நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்புக்குக் கடந்த மே மாதம் இடைக்காலத் தடை விதித்தது.

இதைத்தொடா்ந்து மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கையும், பல காரணங்களின் அடிப்படையில் அந்தக் கணக்கெடுப்புக்கு எதிராக எழுப்பப்பட்ட தீவிரச் சவாலும், சமூகக் கட்டமைப்பில் இருந்து ஜாதியை அகற்ற முயற்சித்தாலும் நிஜத்தில் ஜாதிகள் உள்ளன என்பதே யதாா்த்தமாக உள்ளதை வெளிக்காட்டுகிறது. அத்துடன் ஜாதிகளை ஒதுக்கி தள்ளமுடியாது, அவை காற்றில் கரைந்துவிடாது என்பதையும் எடுத்துரைக்கிறது.

இந்நிலையில், வளா்ச்சியை நீதியுடன் வழங்கும் நியாயமான நோக்கத்துடன், உரிய திறனோடு தொடங்கப்பட்ட மாநில அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை முற்றிலும் சரியானதே என்று நாங்கள் கருதுகிறோம். எனவே பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளத் தடையில்லை என்று தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com