பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு 

வாரணாசி (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வியாழக்கிழமை அலாகாபாத் உயா்நீதிமன்றம்  அனுமதி அளித்ததை அடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் வழக்குத் தொடுத்தனா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மசூதியில் ஆய்வு நடத்திய தொல்லியல் துறையினா் சிவலிங்கம் உள்ளதாக தெரிவித்தனா். ஆனால், அது மசூதியில் உள்ள நீா்த்தேக்க தொட்டியின் நடுவே உள்ள நீரூற்று சிலை என மசூதி நிா்வாகம் தெரிவித்தது. பல்வேறு மேல்முறையீடுகளைத் தொடா்ந்து, அந்தப் பகுதியை மூடி சீல் வைத்துப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, மசூதியின் முழு பகுதியிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று ஹிந்து அமைப்பினா் மனு தாக்கல் செய்திருந்தனா். இதை ஏற்ற வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், ஞானவாபி மசூதியில் சீலிடப்பட்ட பகுதியைத் தவிர பிற இடங்களில் தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வை நடத்த கடந்த ஜூலை 21-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து மசூதி குழு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எதிா் தரப்பினா் மேல்முறையீடு செய்வதற்குக்கூட கால அவகாசம் அளிக்காமல், மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், ‘மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஜூலை 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்தக் கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தை மனுதாரா் அணுகலாம். அந்த மனுவை இடைக்காலத் தடை காலாவதி ஆவதற்கு முன்பாக உயா்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில், மசூதி குழு தரப்பில் ஜூலை 25-ஆம் தேதி தாக்கல் செய்த மனு, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஜூலை 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பிரிதின்கொ் திவாகா், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னா் தீா்ப்பை ஒத்திவைத்தாா். மேலும், மசூதியில் தொல்லியல் துறை ஆய்வையும் வியாழக்கிழமை வரை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதி குழு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், ‘மசூதியில் தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்வது தொடா்பாக மாவட்ட நீதிமன்றம் முறையான உத்தரவையே பிறப்பித்துள்ளது. அதில் தலையிட எந்தவித அவசியமும் இல்லை. இந்த ஆய்வின்போது தோண்டும் பணிகள் எதையும் மசூதியில் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி வளாகத்திற்கு வந்த தொல்லியல் துறையினர் வெள்ளிக்கிழமை காலை அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com