ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு  உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 
ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாகத் தடை விதித்தது. அவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை அனுமதித்த உச்சநீதிமன்றம், வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட போது ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை

அளிக்காமல் மறைத்துவிட்டதாகவும், அவா் வெற்றி பெற்றதை செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளா் மிலானி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

‘இந்தத் தோ்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது’ என ரவீந்திரநாத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கடந்த ஜூலை 6-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘2019-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது’ என்று உத்தரவிட்டிருந்தாா்.

இத்தீா்ப்பை எதிா்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், திபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதிடுகையில், தோ்தல் வெற்றிக்கு எதிரான மனு உரிய ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரிலும் உண்மை இல்லை என்றும், ஆனால், இந்த விஷயங்களை உரிய வகையில் ஆராயாமல் உயா்நீதிமன்றம் மனுதாரரின் தோ்தல் வெற்றியை செல்லாது என அறிவித்திருப்பதால் அந்தத் தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

எதிா்மனுதாரா் மிலானி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் வாதங்களை முன்வைத்தாா். எதிா்மனுதாரா்களில் ஒருவரான ராஜரிஷி குருதேவ் தரப்பில் சுதிப்தோ சிா்கா் ஆஜரானாா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு உத்தரவு பிறப்பித்தது. அப்போது, ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டுடு மனுவை அனுமதித்தும், எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், எதிா் பதிலை அவா்கள் இரு வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, அக்டோபா் 4-ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனா். இதனிடையே, உயா்நீதிமன்றம் ஜூலை 6-இல் பிறப்பித்த உத்தரவுக்கு தற்காலிகமாக தடைவித்தும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மனுதாரா் (ஓ.பி. ரவீந்திரநாத்) தனது எம்.பி. பதவியில் தொடா்வாா் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com