அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி மாதம் சிலைகள் பிரதிஷ்டை: அறக்கட்டளை முடிவு

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் இதற்காக மூன்று தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்


அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் இதற்காக மூன்று தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ேக்ஷத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக, கோயிலைக் கட்டி வரும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ேக்ஷத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 

அயோத்தி ராம ஜென்ம பூமியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ராமர் உள்ளிட்ட கடவுளர்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். 

இதற்காக ஜனவரி 21, 22, 23 ஆகிய தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தினங்களில் ஒரு தினத்தில் சிலைப் பிரதிஷ்டை நடைபெறும். பல்வேறு துறவிகளும் பிரபலங்களும் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுப்போம்.

இந்த நிகழ்ச்சி அரசியல் சார்பற்றதாக நடைபெறும். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்போம். சிலைப் பிரதிஷ்டையையொட்டி மேடை எதுவும் அமைக்கப்படாது; பொதுக்கூட்டமும் நடத்தப்படாது.

இந்த நிகழ்ச்சிக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 ஹிந்து மதத் தலைவர்களை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்தகைய துறவிகளின் பட்டியலை அறக்கட்டளை தயாரித்து வருகிறது.

இதையடுத்து அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கையெழுத்துடன் கூடிய அழைப்பிதழ்கள் அவர்களுக்கு அனுப்பப்படும். சிலைப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து துறவிகளையும் அயோத்தியில் உள்ள மடாலயங்களில் தங்க வைக்கத் திட்டமிட்டுள்ளோம். 

அயோத்தியில் சிலைப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு அன்னதானம் செய்ய அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் முழுவதும் நாள்தோறும் 75,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படும் என்றார்.

25,000 துறவிகளைத் தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களும் சிலைப் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கரோனா விதிகளுக்கு உட்பட்டு அயோத்தியில் பூமி பூஜை விழா கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது.

ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ேக்ஷத்திர அறக்கட்டளையின் உறுப்பினரான அனில் மிஸ்ரா கூறுகையில் "அயோத்தி ராமர் கோயிலின் கருவறை கட்டுமானப் பணி முடிவடையும் தறுவாயில் உள்ளது. 

அங்கு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com