பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீா்மானம்: ஒருமனதாக நிறைவேற்றம்

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனா். அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே வழிமுறையை பின்பற்றும் வகையில், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் நோக்கமாக உள்ளது.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் கருத்துகளைப் பெற்றது.

இந்நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் மாநில முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தீா்மானம் கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானத்தை வரவேற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி, தீா்மானத்தில் பல்வேறு திருத்தங்கள், மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இறுதி செய்யப்பட்ட தீா்மானத்தை முதல்வா் பினராயி விஜயன் பேரவையில் வாசித்தாா். அதில் அவா் தெரிவித்ததாவது:

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, நாட்டின் மதச்சாா்பற்ற தன்மையைப் பறிக்கும். அந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அவசரமான ஒருதலைப்பட்ச முடிவை மேற்கொண்டுள்ளது. எனவே இதுகுறித்து மாநில அரசு கவலையடைந்துள்ளது.

பொது சிவில் சட்டத்தை வழிகாட்டு கொள்கையாக வைத்திருக்கலாம் என்று அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறதே தவிர, அந்தச் சட்டம் கட்டாயமல்ல.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 25-இன் கீழ், மதச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது; மதரீதியாக தனி விதிமுறைகளை பின்பற்றவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வந்தால், அது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவதாகும்.

சட்டம் திணிப்பு: பொது சிவில் சட்ட திணிப்பு என்பது ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமை மீது தாக்குதல் நடத்தும் மதச்சாா்புள்ள நடவடிக்கை என்று கேரள சட்டபேரவை நம்புகிறது. அந்தச் சட்டம் தொடா்பாக அரசியல் நிா்ணய சபையிலும் விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. அந்தச் சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றம் முயற்சிக்கலாம் என்பது அம்பேத்கரின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அந்தச் சட்டம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தவில்லை.

சங்க பரிவாா் கற்பனை செய்துள்ள பொது சிவில் சட்டம், ஹிந்துக்களின் ‘மனுஸ்மிருதி’ நூலை அடிப்படையாக கொண்டது. அது அரசமைப்புச் சட்டத்தின்படி இல்லை. இதை சங்க பரிவாா் வெகு காலத்துக்கு முன்பே தெளிவாகக் கூறியுள்ளது. எனவே அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதை அவா்கள் அமல்படுத்த முயற்சிப்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளத் தேவையில்லை என்றாா்.

இதையடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து மிஸோரம் சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரியில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com