ஒரு செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள்! பிரதமரின் ஜன ஆரோக்கியா திட்டத்தில் மோசடி!

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் நடந்த முறைகேடுகள், சிஏஜி வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒரு செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள்! பிரதமரின் ஜன ஆரோக்கியா திட்டத்தில் மோசடி!

பிரதமரின் கனவு திட்டமாகக் கருதப்படும், ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் (ஏபி-பிஎம்ஜேஏஒய்) கீழ் நடந்த மிக மோசமான முறைகேடுகள் சிஏஜி வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தில் நடந்த முறைகேடுகளை மத்திய தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த முறைகேட்டில் அதிகம் ஈடுபட்ட மாநிலங்களின் பட்டியலில், சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

இந்த அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் மிக முக்கிய மோசடியாக, சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்துவிட்ட நிலையிலும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

ஒரே நேரத்தில் ஒரே நோயாளி, பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக, நோயாளிகள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 9.85 லட்சம் பேருக்கு செல்போன் எண் 3 எனவும், 7.5 லட்சம் பேருக்கு ஒரே செல்போன் எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒரு எண்ணும் போலியானது.

பல மருத்துவமனைகளில், அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிகிச்சையை அளிக்க தேவையான மருத்துவர்களோ கட்டமைப்போ, கருவிகளோ கூட இல்லை என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 88,760 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,14,923 நோயாளிகள் பெற்ற சிகிச்சைகளுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில் ஒரு நோயாளி பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டி பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரே நோயாளி இவ்வாறு பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் காட்டிக் கொடுக்க எந்த தொழில்நுட்பமும் இல்லை. 

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தேசிய சுகாதாரக் கழகம் 2020ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது. அதாவது, ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை ஒரு மருத்துவமனையில் பிறக்கும். அந்தக் குழந்தை உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தாயின் அடையாள அட்டையைக் கொண்டுதான் அனுமதிக்கப்படும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, 78 ஆயிரம் நோயாளிகளில் 48 ஆயிரம் நோயாளிகளின் மருத்துவமனை தரவுகளில், அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே, அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதி பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் கூடுதல் விசேஷமாக அமைந்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கணினியில் பதிவாகும்போது, டிஸ்சார்ஜ் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதிகள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் பதிவு செய்யப்படாமல் பிரச்னை ஏற்பட்டபோது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்துக்கு, மாநில அரசின் சுகாதாரத் துறையும், எந்த வித சரிபார்ப்புப் பணிகளையும் மேற்கொள்ளாமலேயே பணத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்திருப்பதும் அறிக்கையில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகெல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளர் உள்ளிட்ட விவரங்களை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி சரிபார்த்தல் பணிகளை மேற்கொண்டு, சந்தேகத்துக்குரிய, முறைகேடான தரவுகளை கண்டுபிடித்துவருகிறது என்று பதிலளித்த நிலையில்தான், நாடாளுமன்றத்தில் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மோசடிகளைத் தடுத்து, கண்டுபிடித்து, அகற்றுவதற்காக இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுகாதாரத் துறை முறைகேடுகள் அற்றதாக இருக்கவும், உரிய மற்றும் தகுதியானவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதை இது உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார் மத்திய அமைச்சர்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர், நாடு முழுவதும் 24.33 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தரவுகள் மூலம் தெரிய வந்த மிக மோசமான தகவல்
ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் பதிவாகியிருக்கும் தரவுகள், முறைகேடு நடந்திருப்பதை துல்லியமாக எடுத்துரைக்கின்றன. ஏராளமான பயனாளர்களுக்கு ஒரே செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9.85 லட்சம் பேரின் செல்போன் எண் என்று வெறும் 3 என்ற எண் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7.49 லட்சம் பேருக்கு கைப்பேசி எண் 999999999 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களின் பட்டியலில் 8888888888,900000000, 20, 1435, 185397 ஆகியவை உள்ளன. பயனாளர்களின் செல்லிடப்பேசி எண்கள் பெரும்பாலானவை தவறானவை என்பதும், ஒட்டுமொத்தமாக 1119 முதல் 7,49,820 வரையில் உள்ள பயனர்கள் அனைவருக்கும் ஒரே செல்போன் எண் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com