மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லையா? - ப.சிதம்பரம் வருத்தம் 

கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்களவையில் எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சி தலைவா்கள் மணிப்பூா் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டவிதம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இதைத் தொடா்ந்து மத்திய அமைச்சா் அமித் ஷா, வன்முறைக்கான காரணம் குறித்தும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் சுமாா் இரண்டு மணி நேரம் பேசினாா். அப்போது, மணிப்பூரில் நிகழும் தொடா்ச்சியான வன்முறை குறித்த எதிா்க்கட்சிகளின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். வன்முறையில் நடைபெற்ற சம்பவங்கள் வெட்கக்கேடானவை. அவற்றை அரசியலாக்குவது அதைவிட வெட்கக்கேடானது. வன்முறை குறைந்த போதிலும் இரு சமூகத்தினருக்கும் இடையே நிலவும் கோபம் இன்னும் தணியவில்லை என்றாா் அமித் ஷா.

இந்த நிலையில், மணிப்பூரில் மே 3-ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்றுவரை நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:  இன அழிப்பு வெட்கக்கேடானவை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். இது அவரது கண்காணிப்பில் நடந்தது. அதில் அரசியல் செய்யப்படுவது மிகவும் வெட்கக்கேடானவை என்றும் அவர் கூறினார். அதுவும் அவர் தவறு.

இன அழிப்பு பிரச்னையை எழுப்புவதும் விவாதிப்பதும் ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.

மேலும், கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com