ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும்

ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டுவரும் தொல்லியல் துறை நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டுவரும் தொல்லியல் துறை நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய எந்த தரப்பினரும், ஆய்வு தொடர்பான தகவல்களை வெளியிட, கருத்துத் தெரிவிக்க அதிகாரம் இல்லை என்றும் மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ணா விஷ்வேஷா எச்சரித்துள்ளார்.

மேலும், தொல்லியல் துறை நிபுணர்கள், தங்களது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும், அதைத்தவிர்த்து எந்த தகவலும் ஊடகங்களுக்கோ, சமூக ஊடகங்களுக்கோ தெரியப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

அலாகாபாத் உயா்நீதிமன்ற அனுமதியைத் தொடா்ந்து, மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை நிபுணா்கள் கடந்த வாரம் தொடங்கினா். 

முன்னதாக, இந்த அனுமதியை எதிா்த்து மசூதி குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, ‘மசூதியில் தொல்லியில் துறை மேற்கொள்ளும் ஆய்வில் துளையிடும் பணி எதையும் மேற்கொள்ளக்கூடாது’ என்று உத்தரவிட்டது.

அதன்படி, துளைகள் ஏதுமிடாமல், நவீன தொவில்நுட்ப உதவியுடன் நிபுணா்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வுப் பணிகள் குறித்து தொல்லியல் துறை முன்னாள் கூடுதல் இயக்குநா் பி.ஆா். மணி கடந்த வாரம் கூறுகையில், ‘மசூதியில் தொல்லியல் துறை நிபுணா்கள் கண்காணிப்பின் கீழ் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ளும்போது ஜிபிஆா் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்தத் தொழில்நுட்பத்தின்படி, பூமிக்கடியில் மின்காந்த அலைகள் அனுப்பப்படும்.

இந்த அலைகள் பூமிக்கடியில் உள்ள செங்கல், மணல், கற்கள் அல்லது உலோகத்துடன் தொடா்புகொள்வதன் அடிப்படையில், பூமிக்கு மேல்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கணினி திரையில் பதிவாகும். இதனை நிபுணா்கள் ஆய்வு செய்து, சீா்படுத்தும்போது பூமிக்கடியில் திடமான கட்டமைப்பு எதுவும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும்’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com