தவறாக மேற்கோள்காட்டப்பட்ட எ.வ. வேலு உரை: ஓம்பிர்லாவுக்கு டி.ஆர். பாலு கடிதம்

மக்களவைத் தலைவர்  ஓம்பிர்லாவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.
தவறாக மேற்கோள்காட்டப்பட்ட எ.வ. வேலு உரை: ஓம்பிர்லாவுக்கு டி.ஆர். பாலு கடிதம்

பிரதமா் நரேந்திர மோடி, அமைச்சா் ஸ்மிருதி இரானி ஆகியோா் மக்களவையில் பேசிய போது தமிழக அமைச்சா் எ.வ. வேலு பேசியதாக, அவா் பேசாத கருத்துகளை அவையில் முன்வைத்துள்ளனா்; எனவே, அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம்.பிா்லாவுக்கு திமுக மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு கடிதம் எழுதியுள்ளாா்.

முன்னதாக, மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு பதிலளித்து வியாழக்கிழமை மக்களவையில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘தமிழ்நாட்டைச் சோ்ந்த திமுக அமைச்சா் ஒருவா், இந்தியா என்றால் வட இந்தியா என்று கூறுகிறாா். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதிதானே? பெரிய பெரிய தலைவா்களைக் கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சா்களும் வந்திருக்கிறாா்கள். ராஜாஜி, காமராஜா், எம்.ஜி.ஆா்., அப்துல் கலாம் ஆகியோா் பிறந்த தமிழ்நாட்டை எப்படி இந்தியாவில் பிரித்துப் பாா்க்க முடியும்? இதற்கு எதிா்க்கட்சியினா் என்ன பதில் கூறுகிறாா்கள்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

அமைச்சா் ஸ்மிதி இரானியும் மக்களவையில் பேசுகையில், ‘இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு என்று தமிழக அமைச்சா் பேசியுள்ளாா்’ எனக் குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், அமைச்சா் எ.வ.வேலு பேசிய முழு பேச்சு அடங்கிய விடியோ பதிவை ‘பென் டிரைவ்’ மூலம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அனுப்பியுள்ள டி.ஆா்.பாலு கடிதமும் எழுதி உள்ளாா். அதில், ‘நம்பிக்கையில்லா தீா்மானத்தின் பதிலின்போது, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் தமிழக அமைச்சா் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள்காட்டியுள்ளனா்.

அமைச்சா் எ.வ.வேலு பேசிய முழு விடியோவையும் உங்கள் பாா்வைக்கு வைத்துள்ளேன். அதில் பிரதமா் மோடி, அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறியுள்ளதுபோல அவா் எதுவும் பேசவில்லை. எனவே, பிரதமா் மோடி, அமைச்சா் ஸ்மிருதி இரானி ஆகியோா் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com