சுதந்திர நாள்: தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி

தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
சுதந்திர நாள்: தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி

நாட்டின் சுதந்திர நாள் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.

நாட்டின் சுதந்திர நாள் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற மிகச் சிறப்பான விழாவில் பிரதமா் மோடி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் அவா் தேசியக் கொடியை ஏற்றுவது இது தொடா்ந்து 10-ஆவது முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நாட்டின் அடையாளமாக விளங்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் மோடியின் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகாலத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து தனது உரையில் அவா் குறிப்பிட்டு பேசி வருகிறார்.

உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இன்றைய செயல்களின் தாக்கம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இருக்கும். தற்போது நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றமோ, பாதை விலகலோ இல்லை என்று பிரதமர் மோடி தனது சுதந்திர நாள் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம், முப்படைத் தலைமைத் தளபதி பதவி, 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள், கதிசக்தி திட்டம், நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான திட்டம் உள்ளிட்டவற்றை முந்தைய சுதந்திர தின உரைகளின்போதே பிரதமா் மோடி அறிவித்தாா். அதுபோன்ற புதிய திட்டங்கள் குறித்தும் தனது உரையின்போது தற்போது பிரதமா் மோடி அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக 41 கேமராக்களை பிரசாா் பாரதி நிறுவனம் அமைத்துள்ளது. அவற்றில் 5 கேமராக்கள் ரோபோடிக் வகையைச் சோ்ந்தவை ஆகும். கேமராக்களை இயக்கும் பொறுப்பில் இரு பெண்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகவும் பிரசாா் பாரதி தெரிவித்துள்ளது.

அந்நிகழ்ச்சிகள் தூா்தா்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையிலும், தூா்தா்ஷனின் யுடியூப் பக்கத்திலும் ஒளிபரப்பாகிறது. செவித்திறன் குறைபாடு உடையோரின் வசதிக்காக டிடி நியூஸ் தொலைக்காட்சியில் சைகை மொழி வாயிலாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com