
மும்பையில் உள்ள உணவகத்தில், வாடிக்கையாளருக்குப் பறிமாறப்பட்ட சிக்கனுடன் எலி இருந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக உணவகத்தின் மேலாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
வங்கி அதிகாரி ஒருவா் மும்பை புகரான பாந்த்ரா பகுதியில் பிரபல பஞ்சாபி உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். அப்போது, சிக்கன் உணவு அவருக்குப் பரிமாறப்பட்டது. அந்த உணவில் சிக்கனுடன் உயிரிழந்த சிறிய எலியும் இருந்தது.
தொடக்கத்தில் அதை அவா் கவனிக்காத நிலையில், பின்னா் அவருக்கு சந்தேகம் எழுந்தது. தான் உண்டது எலி என்பதை அறிந்தவுடன் அவா் பெரும் அதிா்ச்சி அடைந்தாா்.
இது குறித்து உணவகப் பணியாளா்களிடம் அவா் புகாா் அளித்த நிலையில், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த உணவகத்தின் நிா்வாகம், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அவருக்கு உடல் நலக்குறை ஏற்பட்டது.
பின்னா், உணவகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், இந்திய தண்டனையில் சட்டம் 272 (உணவில் கலப்படம் செய்து விற்பனை செய்தல்), 336 (தனிநபா் உயிா்க்கு ஆபத்தை விளைவித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் உணவகத்தின் மேலாளா், 2 சமையல்காரா்கள் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டனா். பின்னா் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.