தொழுகை நடத்த பேருந்தை நிறுத்தியதால் பணிநீக்கம்: தற்கொலை செய்துகொண்ட நடத்துநர்

தொழுகை நடத்த 2 நிமிடம் பேருந்தை நிறுத்தியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரப்பிரதேச மாநில அரசுப் பேருந்து நடத்துநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொழுகை நடத்த பேருந்தை நிறுத்தியதால் பணிநீக்கம்: தற்கொலை செய்துகொண்ட நடத்துநர்


முஸ்லிம் பயணிகள் தொழுகை நடத்த 2 நிமிடம் பேருந்தை நிறுத்தியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரப்பிரதேச மாநில அரசுப் பேருந்து நடத்துநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குடும்பச் செலவுக்கு பணமில்லாததால் மனமுடைந்த நடத்துநர் மோஹித் யாதவ், ரயில் முன் விழுந்து தற்கொலை கொண்டுள்ளார்.

தொழுகை நடத்த பேருந்தை நிறுத்திய சம்பவம் கடந்த ஜூன் 3ஆம் தேதி நடந்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் நடத்துநரும் ஓட்டுநரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக, பணிநீக்கம் செய்யப்பட்டதால் குடும்ப செலவுக்கு பணமில்லாமல், மன அழுத்தத்தில் இருந்த மோஹித் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது வீட்டுக்கு அருகே இருந்த தண்டவாளத்திலிருந்து அவரது உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

உத்தரப்பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், ஒப்பந்த அடிப்படையில் நடத்துநராக இருந்தவர் மோஹித் யாதவ். கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்துநராகப் பணியாற்றி ரூ.17 ஆயிரம் மாத சம்பளம் பெற்று வந்துள்ளார். இந்த சம்பவத்தால் இவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பேருந்தின் ஓட்டுநர் அரசுப் போக்குவரத்து ஊழியர் என்பதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர், 50 சதவீத ஊதிய பிடித்தத்துடன்  மீண்டும் பணியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

என்ன நடந்தது?
ஜூன் 3ஆம் தேதி தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த இரண்டு முஸ்லிம் மதத்தினர், தொழுகை நடத்துவதற்காக, மோஹித் யாதவ்,  பேருந்தை பரேய்லி - தில்லி தேசிய நெடுஞ்சாலையோரம் இரண்டு நிமிடம் நிறுத்தச் செய்துள்ளார்.

இந்த சம்பவம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குத் தெரிய வந்ததும், ஜூன் 5ஆம் தேதியே இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். 

இதனால், கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் எதுவும் இன்றி, குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது நெருங்கிய நண்பரிடம் பேசிய மோஹித், தனது கைப்பேசியை ரீசார்ஜ் செய்யக் கூட தன்னிடம் காசு இல்லை என்றும், மேல்முறையீடு செய்தாலும் வேலை கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை அதற்குக் கூட பணமில்லை என்றும் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பது போல பேசியுள்ளார்.  பிறகு, ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், தொழுகை நடத்த பேருந்தை நிறுத்தியது குறித்து சமூக வலைத்தளங்களில் விடியோவுடன் புகார்கள் வந்ததால், உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விடியோவில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கோரப்பட்டிருந்தது. அவர் மேல்முறையீடும் செய்யலாம். ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் கே.பி. சிங் (58) கூறுகையில், நான் தொடர்ந்து மோஹித்துடன் பேசி வந்தேன். அவரது பெற்றோர்தான் ஏதோ கொஞ்சம் குடும்ப செலவுகளை பார்த்துக் கொண்டதாகக் கூறியிருந்தார். நானும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தை எப்படியே கஷ்டப்பட்டு சமாளித்து வருகிறேன் என்றார்.

தற்கொலை செய்துகொண்ட மோஹித் யாதவின் மனைவி பேசுகையில், வேலை போனதால், எனது கணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அவரால் தூங்கவே முடியவில்லை. நிம்மதி இல்லாததால் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டே இருந்தது. அவரது ஒரே ஊதியத்தை நம்பித்தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். அவர் தனது மனிதாபிமானத்துக்கான கூலியை கொடுத்துவிட்டார் என்று கூறிவிட்டு கதறி அழுதார்.

எட்டு பேர் கொண்ட குடும்பத்தில் ஒரே ஒரு சம்பளம் ஈட்டும் நபராக மோஹித் இருந்துள்ளார். தொழுகை நடத்த பேருந்தை நிறுத்திய சம்பவத்துக்குப் பிறகு, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மோஹித் பேட்டி அளித்துள்ளார். அதில் கூட, வெறும் 2 நிமிடம் தானே என்று நினைத்து நான் பேருந்தை நிறுத்தினேன். அவர்களை தொழுகை நடத்த அனுமதித்தேன். அப்போது அங்கிருந்த யாருமே புகார் தெரிவிக்கவில்லை. நான் இதில் என்ன தவறு செய்தேன் என்றே எனக்குப் புரியவில்லை என்று கூறியிருந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com