மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும்: திக்விஜய் சிங் நம்பிக்கை

கருத்துக் கணிப்பு முடிவுகள் மிகவும் மாறுபட்டவை என்பதால் அதுகுறித்து எதுவும் கருத்து கூற முடியாது
திக்விஜய் சிங்
திக்விஜய் சிங்

போபால் (மத்தியப் பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், கருத்துக் கணிப்பு முடிவுகள் மிகவும் மாறுபட்டவை என்பதால் அதுகுறித்து எதுவும் கருத்து கூற முடியாது என்று கூறினார்.

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவுகள் டிசம்பா் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

இந்தச் சூழலில், ஐந்து மாநிலங்களின் வாக்குப் பதிவுக்கு பிந்தைய தோ்தல் கணிப்பு முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சிகள் வெளியிட்டன.

பெரும்பாலான முடிவுகளின்படி, ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் ஆளுங்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறப்படுகிறது. 

தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்)-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

மிஸோரமில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி(எம்என்எஃப்), எதிர்க்கட்சிகளான ஸோரம் மக்கள் இயக்கம் (ஜீபிஎம்), காங்கிரஸ் இடையிலான மும்முனை போட்டியால் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 102 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் பாஜக 106 முதல் 116 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

இது தொடர்பாக திக்விஜய் சிங் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகவும் மாறுபட்டவை. இதைப் பற்றி எங்களால் எதுவும் கூற முடியாது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிவித்தார்.

"சிவராஜ் சிங் சௌகான் மற்றும் அவரது போலி வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர். எனவே, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

ஐந்து மாநிலங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடந்தது, டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு அரையிறுதிக் களமாக கருதப்படுவதால் பெரும் எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com